Home செய்திகள் தேசிய செய்திகள் ஆயுஷ்மான் பாரத் திட்டம் தொடங்கி8 ஆண்டுகள் நிறைவு

ஆயுஷ்மான் பாரத் திட்டம் தொடங்கி8 ஆண்டுகள் நிறைவு

புதுடில்லி, செப். 23: ஆயுஷ்மான் பாரத் திட்டம் தொடங்கப்பட்டு 8 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இதன் மூலம் 60 கோடிக்கும் அதிகமான மக்கள் பயனடைந்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஒரு குடும்பத்துக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரையிலான இலவச மருத்துவக் காப்பீடு வழங்கும் வகையில் மத்திய அரசு ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
இந்தத் திட்டத்தை பிரதமர் மோடி 2018-ம் ஆண்டு செப்டம்பர் 23-ம் தேதி தொடங்கி வைத்தார். திட்டம் தொடங்கி 8 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது: நாட்டில் உள்ள ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் உயர்தரமான, மலிவான மருத்துவ வசதிகள் கிடைக்க வேண்டும் என்பதே ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் நோக்கம். அந்த நோக்கத்துடன் 8 ஆண்டுகளுக்கு முன்பு இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது, ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம் 60 கோடிக்கும் அதிகமான மக்கள் பயனடைந்து வருகின்றனர். அவர்கள் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரையிலான மருத்துவக் காப்பீட்டை பெறுகின்றனர். மருத்துவச் செலவுகளில் இருந்து கிடைக்கும் சேமிப்பு மூலம் ஏழைகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் பயனடைந்துள்ளனர். பயனாளிகளுக்குத் தேவையான அனைத்து சுகாதார வசதிகளும் அவர்களின் இருப்பிடங்களுக்கு அருகிலேயே கிடைக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திர் மையங்களுக்கு 500 கோடிக்கும் அதிகமானோர் வந்துள்ளதாக பதிவுகள் தெரிவிக்கின்றன. இது, கீழ்மட்ட அளவில் ஆரம்ப சுகாதாரச் சேவைகள் வலுப்படுத்தப்பட்டுள்ளதைக் காட்டுகிறது. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் அனைத்து பயனாளிகளுக்கும் எனது வாழ்த்துகள் என்றும் பிரதமர் மோடி தனது பதிவில் தெரிவித்துள்ளார்.