Home செய்திகள் தேசிய செய்திகள் சம்பள விவகாரம் – ஜவுளி கடைக்கு தீ வைப்பு

சம்பள விவகாரம் – ஜவுளி கடைக்கு தீ வைப்பு

சூரத், செப். 23-
குஜராத் மாநிலம் சூரத் நகரில் உள்ள ஷியாம் சங்கினி ஜவுளி மார்க்கெட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 14 கடைகளில் இருந்த ரூ.24 கோடி மதிப்பிலான துணிகள் எரிந்து நாசமானது. சம்பள நிலுவை தொடர்பான ஆத்திரத்தில், முன்னாள் கணக்காளர் ஒருவர் கடைக்கு தீ வைத்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 8-ம் தேதி நள்ளிரவில் இந்தச் சம்பவம் நடந்தது. இதுகுறித்து சாரோலி பகுதி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். ‘விஸ்வாஸ் புராஜெக்ட் பேஸ்-2’ திட்டத்தின் கீழ் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களின் காட்சிகளையும் ஆய்வு செய்தனர். அப்போது, ஒரு கடையின் வெளியே வைக்கப்பட்டிருந்த துணிப் பார்சல்களுக்கு முகத்தைத் துணியால் மூடிய ஒருவர் தீ வைக்கும் காட்சிகள் பதிவாகியிருந்தன. காட்சிகளின் அடிப்படையில், டிண்டோலி பகுதியில் உள்ள பிலிபத்ரா ரெசிடென்சியைச் சேர்ந்த வினோத் பண்டிட் சாவ்லே என்பவரை போலீஸார் அடையாளம் கண்டு கைது செய்தனர். போலீஸார் நடத்திய விசாரணையில்,
வினோத் சாவ்லே கடந்த ஏப்ரல் முதல் மூன்று மாதங்கள் அங்குள்ள ஒரு ஜவுளிக் கடையில் கணக்காளராகப் பணியாற்றியதாகத் தெரியவந்தது. கணக்குப் பணிகளைச் சரியாகக் கையாள முடியாததால், ஜூன் மாதம் அவர் வேலையில் இருந்து நீக்கப்பட்டதாக போலீஸார் கூறினர்.
மேலும், முதலாளி தனக்கு வழங்க வேண்டிய ரூ.10,000 சம்பளத்தைத் தராமல் இழுத்தடித்ததால் ஆத்திரமடைந்த சாவ்லே, கடை உரிமையாளருக்குப் பாடம் புகட்டத் திட்டமிட்டதாகவும் தெரிவித்தனர். இதற்காக அவர் அருகிலுள்ள பெட்ரோல் நிலையத்தில் சுமார் ரூ.150-க்கு ஒரு பாட்டிலில் பெட்ரோல் வாங்கியுள்ளார்.