Home செய்திகள் தேசிய செய்திகள் புற்றுநோய் மருந்து விலை‘பகல் கொள்ளை’: சுப்ரீம் கோர்ட்டு

புற்றுநோய் மருந்து விலை‘பகல் கொள்ளை’: சுப்ரீம் கோர்ட்டு

புதுடெல்லி: செப். 23-
அத்தியாவசியமான புற்றுநோய் மருந்து ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலையை ரூ.27 ஆயிரமாக நிர்ணயித்திருப்பது அப்பட்டமான பகல் கொள்ளை என்று சுப்ரீம் கோர்ட்டு கண்டனம் தெரிவித்துள்ளது. மருந்து நிறுவனங்கள் அதிக விலை நிர்ணயிப்பதைத் தடுக்க வேண்டிய அதிகாரிகள் மவுனமாக இருப்பது ஆச்சரியமாக உள்ளது என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
அத்தியாவசிய மருந்துகளுக்கு மருந்து நிறுவனங்கள் அதிக விலை நிர்ணயிப்பதைத் தடுக்க உத்தரவிடக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மருந்துகளுக்கான விலை கட்டுப்பாட்டை கண்டிப்பாக உறுதி செய்யவும், சில்லறை விற்பனையாளர்கள் கொள்ளை லாபம் ஈட்டுவதைத் தடுக்கவும் மனுக்களில் கோரப்பட்டுள்ளது. மேலும், மூலக்கூறு மருந்துகளை பரிந்துரைக்காத டாக்டர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுதாரர்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்த மனுக்கள், நீதிபதிகள் விக்ரம்நாத், சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தன. அப்போது, மருந்துகளுக்கு அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிப்பது அவசியம் என்று மனுதாரர்களில் ஒருவர் தெரிவித்தார். மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கே.எம்.நடராஜ், “மத்திய அரசும் ஒரு மனுதாரர்தான். இந்த மனுவை நாங்கள் எதிர்மறையாக கருதவில்லை” என்றார்.
இதையடுத்து நீதிபதிகள் கூறியதாவது: அத்தியாவசிய புற்றுநோய் மருந்தின் அதிகபட்ச சில்லறை விலை ரூ.27 ஆயிரம் என அச்சிடப்பட்டுள்ளது. ஆனால், அந்த மருந்து சில்லறை விற்பனையாளருக்கு ரூ.2 ஆயிரத்து 700-க்கு வழங்கப்பட்டுள்ளது. வழங்கிய விலையைவிட 10 மடங்கு அதிகமாக சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. “இது கொள்ளை இல்லாவிட்டால், வேறு எது கொள்ளை?” என்று கேள்வி எழுப்பினர்.
மக்கள் வீடுகளையும் நகைகளையும் விற்று சிகிச்சை பெறும் நிலையில், இது நோயாளிகளிடம் நடத்தப்படும் அப்பட்டமான பகல் கொள்ளை என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகள் மவுனமாக இருப்பது மேலும் ஆச்சரியமளிப்பதாகக் கூறிய அவர்கள், வழக்கு விசாரணையை 29-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.