Home செய்திகள் தேசிய செய்திகள் அகிலேஷ் அல்லது ராகுல்: மாறுபட்ட குரல்கள்

அகிலேஷ் அல்லது ராகுல்: மாறுபட்ட குரல்கள்

உத்தரப் பிரதேசம், செப். 23- 2027-ம் ஆண்டு நடைபெற உள்ள உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, பாரதிய ஜனதா கட்சியை எதிர்கொள்வதற்கான முக்கியத் தலைவர்களாக சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவையும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியையும் அந்தந்த கட்சி எம்.பி.க்கள் முன்னிறுத்தியுள்ளனர்.
2024 மக்களவைத் தேர்தலில் சமாஜ்வாதி-காங்கிரஸ் கூட்டணி சார்பில் வெற்றி பெற்ற சமாஜ்வாதி எம்.பி. இக்ரா ஹசன், காங்கிரஸ் எம்.பி. இம்ரான் மசூத் ஆகியோர், பாஜகவை எதிர்கொள்ள தங்கள் கட்சித் தலைவர்களே முக்கியமானவர்கள் என்று தனித்தனியாக தெரிவித்துள்ளனர். இரு கட்சிகளின் மூத்த தலைவர்கள் கூட்டணி ஒற்றுமையை தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், இந்தக் கருத்துகள் வெளியாகியுள்ளன. இதே நாளில், பாஜக தலைவர் நிதின் நபின் மேற்கு உத்தரப் பிரதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, தேர்தல் வியூகத்தை வலுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டார். மசூத் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், “நாடு முழுவதும் எதிர்க்கட்சியின் குரலாக இருப்பவர் ராகுல் காந்தி மட்டுமே. அது பாஜகவை அச்சுறுத்துகிறது. ராகுல் கடுமையாக உழைத்து சாதகமான சூழலை உருவாக்கியுள்ளார். எனவே, ராகுல் இல்லாமல் எதுவும் சாத்தியமில்லை என்பதில் சந்தேகமில்லை” என்றார்.
முன்னதாக சமாஜ்வாதி கட்சியில் இருந்த மசூத், தொகுதிப் பங்கீடு குறித்து விரைவாக முடிவு எடுக்க வேண்டும் என்றும், கூட்டணியில் காங்கிரஸ் “மூத்த சகோதரர்” என்றும் தொடர்ந்து கூறி வருகிறார். எனினும், கூட்டணியின் அமைப்பு குறித்து ராகுல் காந்தியும் அகிலேஷ் யாதவும் முடிவு செய்வார்கள் என சமாஜ்வாதி தலைவர்கள் தெரிவித்துள்ளனர். செவ்வாய்க்கிழமை அகிலேஷ் யாதவை முன்னிறுத்திய இக்ரா ஹசன், “பாஜகவை தோற்கடிக்க அகிலேஷ் யாதவால் மட்டுமே முடியும். காங்கிரஸ் தனித்து அதிகம் சாதிக்க முடியாது” என்றார். இந்த மாறுபட்ட கருத்துகள், மூத்த தலைவர்கள் ஒற்றுமையை வலியுறுத்தினாலும், உள்ளூர் தலைவர்கள் மற்றும் கூட்டணி தொண்டர்களிடையே கருத்து பரிமாற்றத்தில் இடைவெளி இருப்பதை வெளிப்படுத்தியுள்ளன. 2024 மக்களவைத் தேர்தலில் இரு கட்சிகளும் இணைந்து போட்டியிட்டு 43 தொகுதிகளில் வெற்றி பெற்றன. சமாஜ்வாதி 37 தொகுதிகளையும், காங்கிரஸ் 6 தொகுதிகளையும் கைப்பற்றின.