Home மாவட்டங்கள் பெங்களூர் மக்களின் மனங்களை தொட்ட`வீடு தேடி போலீஸ்’ திட்டம்: ஓராண்டு சாதனை

மக்களின் மனங்களை தொட்ட`வீடு தேடி போலீஸ்’ திட்டம்: ஓராண்டு சாதனை

பெங்களூர்: செப். 23-
பொதுமக்களுக்கும் போலீசாருக்கும் இடையேயான உறவை வலுப்படுத்தும் நோக்கில், நாட்டிலேயே முதன்முறையாக கர்நாடக அரசு அமல்படுத்திய ‘வீடு தேடி போலீஸ்’ (மனே மனேகே போலீஸ்) திட்டம் வெற்றிகரமாக ஓராண்டை நிறைவு செய்துள்ளது!
கடந்த 2025 ஜூலை 18 அன்று தலைநகர் பெங்களூரில் தொடங்கப்பட்ட இத்திட்டம், பொதுமக்கள் மத்தியில் போலீஸ் மற்றும் காவல் நிலையம் மீதிருந்த பயத்தைப் போக்கி, சட்ட விழிப்புணர்வை ஏற்படுத்தி மாபெரும் மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது.
சட்டவிரோத நடவடிக்கைகளை ஒடுக்குவதோடு, எந்தவொரு குற்றச் சம்பவம் நடந்தாலும் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சட்டம்-ஒழுங்கை பராமரிக்க இத்திட்டம் பெரும் துணையாக நின்றுள்ளது. பீட் கான்ஸ்டபிள்கள், இன்ஸ்பெக்டர்கள் மற்றும் தன்னார்வலர்கள் நேரடியாக ஒவ்வொரு வீட்டிற்கும் நேரில் சென்று மக்களின் குறைகளைக் கேட்டு உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
பொதுமக்களிடம் காவல்துறையினர் சினேகமான அணுகுமுறையை வளர்த்துக்கொள்ள இத்திட்டம் வழிவகுத்துள்ளது. உள்ளூர் மக்களின் மூலம் ரகசிய தகவல்களைப் பெற்று குற்றங்களைத் தடுக்கவும், வழக்குகளை விரைந்து கண்டுபிடிக்கவும் முடிகிறது. மேலும், பெண்கள் பாதுகாப்பு, சைபர் குற்றங்கள் மற்றும் குற்றத்தடுப்பு முறைகள் குறித்து நேரடியாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
துணை முதலமைச்சரும் அன்றைய உள்துறை அமைச்சருமான டாக்டர் ஜி. பரமேஷ்வர் கனவு கண்டபடி, “மக்களின் இருப்பிடத்திற்கே சென்று குறைகளைக் கேட்டறியும்” முயற்சி இன்று முழுமையாகச் சாத்தியமாகியுள்ளது.
அதிகாரிகள் வீடுகளுக்கு நேரில் சென்று மக்களின் குறைகளை அறிந்து, பாதுகாப்பு வழிகாட்டுதல்களை வழங்குகின்றனர். சைபர் குற்றங்கள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்து தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு, பகுதிவாசிகளுடன் இணைந்து குழுக்களை அமைத்து உள்ளூர் பாதுகாப்பையும் பலப்படுத்துகின்றனர்.
காவல்துறை – பொதுமக்கள் இடையே நேரடி தொடர்பை ஏற்படுத்துவது, குற்றத்தடுப்பில் சமூக பங்கேற்பை ஊக்குவிப்பது மற்றும் காவல்துறையின் வெளிப்படைத்தன்மை, உடனடி பதிலளிக்கும் திறனை அதிகரிப்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.