
வாஷிங்டன், செப். 26-
ஈரான் முன்வைத்த 7 நாள் போர் நிறுத்தத் திட்டத்தை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நிராகரித்ததாகவும், நவம்பர் மாத இடைத்தேர்தலுக்குப் பிறகு ஈரான் மீது மீண்டும் குண்டுவீச்சு நடத்தப்படலாம் என அவர் தனது ஆலோசகர்களிடம் தெரிவித்ததாகவும் அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள் காட்டி தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்கா–ஈரான் இடையே மறைமுக அணு பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் நிலையில், ஹோர்முஸ் நீரிணை தொடர்பான பதற்றமும் நீடிக்கிறது. ஈரானின் திட்டப்படி, அமெரிக்கா தனது கடற்படை முற்றுகையை நீக்க வேண்டும், முடக்கப்பட்டுள்ள ஈரானிய சொத்துகளில் சிலவற்றை விடுவிக்க வேண்டும், ஈரானிய எண்ணெய் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடைகளைத் தளர்த்த வேண்டும். அதற்குப் பதிலாக, ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறந்து, அணு திட்டம் தொடர்பான பேச்சுவார்த்தையைத் தொடங்க ஈரான் முன்வந்ததாகக் கூறப்படுகிறது. முற்றுகை காரணமாக ஏற்கெனவே பாதிக்கப்பட்டுள்ள ஈரான் பொருளாதாரத்தில் கூடுதல் அழுத்தம் ஏற்பட்டுள்ளது. ஆனால், கடற்படை முற்றுகையை நீக்க டிரம்ப் தயாராக இல்லை என்று அமெரிக்கா ஈரானுக்கும் மத்தியஸ்தர்களுக்கும் தெரிவித்ததாக அதிகாரிகள் கூறினர். இதனால், மோதல் மீண்டும் தீவிரமாவதற்கும் தூதரக பேச்சுவார்த்தைகள் தொடர்வதற்கும் இடைப்பட்ட நிச்சயமற்ற நிலை நீடிக்கிறது. ஈரான் தனது அணு திட்டத்தை கைவிடும் ஒப்பந்தத்தை இடைத்தேர்தலுக்குப் பிறகு நாடுவதாக டிரம்ப் வெளிப்படையாகக் கூறியுள்ளார். எனினும், ஈரான் தனது கோரிக்கைகளை ஏற்குமா என்பதில் அவர் சந்தேகமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மீண்டும் நடத்தப்படும் தாக்குதலின் அளவு இதுவரை தீர்மானிக்கப்படவில்லை. பிற சாத்தியமான ராணுவ நடவடிக்கைகளுக்காக குறைந்த அளவிலான வெடிமருந்துகளைப் பாதுகாக்க அமெரிக்கா விரும்புவதால், மற்றொரு பெரிய போர் நடவடிக்கையைத் தொடங்க டிரம்ப் தயங்குவதாகவும் கூறப்படுகிறது.













