
கின்ஷாசா: செப். 26-
காங்கோ ஜனநாயகக் குடியரசில் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில், 2 உயர்நிலை ராணுவ அதிகாரிகள் உள்பட குறைந்தது 14 பேர் உயிரிழந்தனர் என்று அந்நாட்டு ராணுவம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
உயிரிழந்த ராணுவ அதிகாரிகள், ராணுவ நீதிமன்றத்தின் தலைவரான லெப்டினன்ட் ஜெனரல் முடோம்போ கட்டலாயி தியெண்டே, ஆயுதப் படைகளின் தலைமைத் தணிக்கையாளரான லெப்டினன்ட் ஜெனரல் பாகுமி லிகுலியா ஆகியோர் என அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த விபத்தில் அந்தக் குழுவைச் சேர்ந்த 12 பேரும் விமானக் குழுவினரும் உயிரிழந்ததாக காங்கோ ராணுவ செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் எஃபோமி எகெங்கே அறிக்கை மூலம் கூறினார். விமானத்தில் இருந்த அனைவரும் உயிரிழந்ததாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தென்மேற்கு காங்கோவில் உள்ள கிக்விட் நகரிலிருந்து தலைநகர் கின்ஷாசாவுக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து கெங்கே பகுதியில் அந்த விமானம் விபத்துக்குள்ளானது.
விமான விபத்துக்கான சூழ்நிலைகள் மற்றும் காரணத்தைக் கண்டறிய விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக எகெங்கே தெரிவித்தார். விபத்துக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை என்று காங்கோ சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் நிர்வாகக் குழுத் தலைவர் டிரைபோன் கின்-கியே முலும்பா கூறினார்.
காங்கோ ராணுவம், அந்நாட்டின் கிழக்குப் பகுதியில் செயல்பட்டு வரும் ஏராளமான கிளர்ச்சிக் குழுக்களுக்கு எதிராகத் தொடர்ந்து போராடி வரும் நிலையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. ருவாண்டாவின் ஆதரவு பெற்றதாகக் கூறப்படும் எம்23 அமைப்பு உள்பட பல கிளர்ச்சிக் குழுக்கள் அங்கு செயல்பட்டு வருகின்றன. அண்மையில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய தொடர் தாக்குதல்களால், பல முக்கிய நகரங்கள் கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து அந்த மோதல் தீவிரமடைந்துள்ளது.













