
ஆய்ச்சி-நகோயா: செப். 26-
ஆசிய விளையாட்டுப் போட்டி 2026-ல் ஆண்கள் மரத்தான் பிரிவில் இந்திய வீரர் சாவன் பர்வால் வெள்ளிப் பதக்கம் வென்று வரலாறு படைத்தார். இதன் மூலம், மரத்தான் போட்டியில் இந்தியா ஆசிய விளையாட்டுப் பதக்கம் வெல்லாமல் இருந்த 44 ஆண்டுக் காத்திருப்பு முடிவுக்கு வந்தது.
ஆண்கள் மரத்தான் இறுதிப் போட்டியில் 2 மணி 11 நிமிடம் 37 வினாடிகளில் இலக்கை எட்டிய பர்வால், தனிப்பட்ட சிறந்த நேரத்தையும் புதிய தேசிய சாதனையையும் பதிவு செய்தார். போட்டியின் இறுதிக் கட்டங்களில் முன்னிலை பெற்ற ஜப்பானின் யமஷிதா தங்கப் பதக்கம் வென்றார்.
போட்டியின் தொடக்கத்திலிருந்தே பர்வால் சிறப்பாக செயல்பட்டார். 10 கிலோமீட்டர் தூரத்துக்குப் பிறகு முன்னணி வீரர்களில் ஒருவராகத் தொடர்ந்த அவர், 21 கிலோமீட்டர் கட்டத்தில் முன்னிலைக்கு வந்தார். வேகம் அதிகரித்தபோதும் முன்னணி குழுவுடன் இணைந்து ஓடினார். 30 முதல் 35 கிலோமீட்டர் வரையிலான கட்டத்திலும் முன்னணி போட்டியாளர்களில் ஒருவராக இருந்தார். அந்த நேரத்தில் ஜப்பானின் யமஷிதா, சீனாவின் ஹான், பர்வால் ஆகியோர் முன்னணி மூவராகத் திகழ்ந்தனர். 36 கிலோமீட்டர் கட்டத்தில் யமஷிதா, பின்தொடர்ந்த குழுவைவிட சுமார் 20 முதல் 30 மீட்டர் இடைவெளியை உருவாக்கினார். எனினும், பர்வால் தனது சிறப்பான ஓட்டத்தைத் தொடர்ந்து இரண்டாவது இடத்தைத் தக்கவைத்து, வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்தார். 44 ஆண்டுகளுக்குப் பிறகு ஆசிய விளையாட்டுப் போட்டி மரத்தான் பிரிவில் இந்தியாவுக்குக் கிடைத்த முதல் பதக்கம் இதுவாகும். இந்தியாவின் கார்த்திக் கர்கேராவும் ஆண்கள் மரத்தான் இறுதிப் போட்டியில் பங்கேற்றார். தொடக்கக் கட்டங்களில் முன்னணி குழுவில் இருந்த அவர், போட்டி முன்னேறியபோது பின்தங்கினார். ஆசிய விளையாட்டுப் போட்டியில் இதுவரை இந்தியா 2 தங்கம், 10 வெள்ளி, 12 வெண்கலம் என மொத்தம் 24 பதக்கங்களை வென்றுள்ளது. இதில் 10 பதக்கங்கள் துப்பாக்கிச் சுடுதலில் கிடைத்தவை.













