
புதுடெல்லி, செப். 27- வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி (எஸ்.ஐ.ஆர்.) தொடர்பான அனைத்து முடிவுகளும் ஒருமனதாக எடுக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் மீண்டும் விளக்கம் அளித்துள்ளது. தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார், தேர்தல் கமிஷனர்கள் சுக்பீர் சிங் சந்து, விவேக் ஜோஷி ஆகியோரிடையே கருத்து வேறுபாடு நிலவியதாக வெளியான செய்திகள் உண்மையல்ல என ஆணையம் தெரிவித்துள்ளது.எஸ்.ஐ.ஆர். உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் தலைமை தேர்தல் கமிஷனர் தன்னிச்சையாக முடிவெடுத்ததாகவும், இரு கமிஷனர்களும் கடந்த 10 மாதங்களில் 14 முறை எதிர்ப்பு பதிவு செய்ததாகவும் கடந்த 23-ம் தேதி செய்தி வெளியானது. படிவம் 6-ல் கடுமையான நிபந்தனைகள் சேர்க்கப்பட்டதாகவும், உள்ளூர் வாக்காளர் பதிவு அதிகாரிகளின் அதிகாரங்கள் பறிக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து, ஞானேஷ் குமாருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் மூன்றாவது முறையாக பதவி நீக்கத் தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளதாகவும், அவருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், எஸ்.ஐ.ஆர். உத்தரவு கடந்த ஆண்டு ஜூன் 24-ம் தேதி பிறப்பிக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. பீஹாரில் தொடங்கப்பட்ட பணி, மேற்கு வங்கம், கேரளா, தமிழகம் உள்ளிட்ட 30 மாநிலங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டது. இப்பணிகளுக்கு மூன்று கமிஷனர்களும் ஒருமனதாக ஒப்புதல் அளித்ததாகவும், படிவம் 6-ல் செய்யப்பட்ட மாற்றங்கள் மற்றும் எஸ்.ஐ.ஆர். பணியை உச்ச நீதிமன்றம் அங்கீகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.














