
சென்னை, செப். 27-
வீடுகளுக்கான மின்பயன்பாட்டைக் கணக்கிடும் பணிகளைத் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கக் கூடாது என தமிழக அரசுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கையில், வீடுகளுக்கான மின்பயன்பாடு கணக்கீட்டுப் பணிகள் அடுத்த 6 மாதங்களுக்கு தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக மின்வாரியம் அறிவித்திருப்பது கண்டனத்துக்குரியது எனத் தெரிவித்துள்ளார். மின் கணக்கீட்டாளர் பணிக்கு ஒப்பந்தப் பணியாளர்களை நியமிக்கும் முடிவைக் கைவிட்டு, நிரந்தரப் பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் கூறுகையில், மின்கணக்கீட்டுப் பணியைத் தனியாரிடம் ஒப்படைப்பது மின்கட்டண உயர்வுக்கும் முறைகேடுகளுக்கும் வழிவகுக்கும் எனத் தெரிவித்துள்ளார். வேலைவாய்ப்புக்காகப் பதிவு செய்து லட்சக்கணக்கானோர் காத்திருக்கும் நிலையில், ஆள் பற்றாக்குறையைக் காரணம் காட்டி தனியார் நிறுவனங்களின் ஒப்பந்த முறைக்குச் செல்வது ஏற்கத்தக்கதல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்ட அறிக்கையில், தூய்மைப் பணிகள் தொடங்கி விமான நிலையம் வரையிலான பணிகளைத் தனியாருக்கு வழங்குவதில் முதல்வருக்கு ஏன் இவ்வளவு ஆர்வம் எனக் கேள்வி எழுப்பியுள்ளார். மின்கணக்கீட்டாளர் பணிக்கு தனியார் ஒப்பந்த நிறுவனங்கள் மூலம் ஊழியர்களை நியமிக்க முயல்வது கண்டனத்துக்குரியது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.















