Home செய்திகள் தேசிய செய்திகள் வாக்கு நீக்க விவகாரம்: கரப்பான் கட்சி போராட்டம்

வாக்கு நீக்க விவகாரம்: கரப்பான் கட்சி போராட்டம்

டெல்லி, செப். 27-
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி, கரப்பான் பூச்சி கட்சி நாடு தழுவிய போராட்டத்தை அறிவித்துள்ளது. இதற்கிடையில், மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களின் தொகுதிகளில் நீக்கப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கையையும், அத்தொகுதிகளில் ஏற்பட்ட வெற்றி–தோல்வி வாக்கு வித்தியாசத்தையும் ஒப்பிட்டு அக்கட்சி வெளியிட்டுள்ள பதிவு விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என கரப்பான் பூச்சி கட்சி விதித்திருந்த காலக்கெடு முடிவடைந்ததைத் தொடர்ந்து, அக்டோபர் 2-ம் தேதி மும்பையில் தொடங்கி நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இரு நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சித் தலைவர்கள், எதிர்க்கட்சித் தலைவர்களின் தொகுதிகளில் வாக்காளர்கள் நீக்கப்பட்டதாக குற்றம்சாட்டினர். தற்போது வெளியிட்டுள்ள பதிவில், மேற்கு வங்கத்தின் பவானிபூர் தொகுதியில் சுமார் 51 ஆயிரம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதாகவும், அங்கு மம்தா பானர்ஜி சுமார் 15,105 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததாகவும் கரப்பான் ஜனதா தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் போட்டியிட்ட தொகுதியில் சுமார் ஒரு லட்சம் வாக்குகள் நீக்கப்பட்டதாகவும், அவர் சுமார் 9 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் போட்டியிட்ட தொகுதியில் சுமார் 40 ஆயிரம் வாக்குகள் நீக்கப்பட்ட நிலையில், அவர் சுமார் 4 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததாகவும் அக்கட்சி தெரிவித்துள்ளது. இவை தற்செயல் நிகழ்வுகள் அல்ல என்பது கரப்பான் பூச்சி கட்சி நிறுவனர் அபிஜீத் திப்கேவின் வாதமாகும். 2024 மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிராக ஒருங்கிணைந்து போட்டியிட்ட தலைவர்கள் மட்டுமே தோல்வியடைந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்து, விவேக் ஜோஷி ஆகியோர் கடந்த 10 மாதங்களில் வாக்காளர் பட்டியல், புதிய வாக்காளர்கள் சேர்ப்பு, பெயர் நீக்கம் உள்ளிட்ட முடிவுகள் தொடர்பாக குறைந்தது 14 முறை ஆட்சேபனை தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகின. ஆனால், தேர்தல் ஆணையத்துக்குள் பிளவு இல்லை என்றும், மாறுபட்ட கருத்துகள் தெரிவிப்பது வழக்கமான நடைமுறை என்றும் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. முக்கிய முடிவுகள் மூன்று தேர்தல் ஆணையர்களின் ஒப்புதலுடனேயே எடுக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.