Home செய்திகள் உலக செய்திகள் நேபாளத்தில் தொடர் மழை: 14 பேர் பலி

நேபாளத்தில் தொடர் மழை: 14 பேர் பலி

காத்மாண்டு, செப். 28- நேபாளத்தில் கடந்த வியாழக்கிழமை முதல் பெய்து வரும் கனமழையால் வெள்ளம், நிலச்சரிவு மற்றும் தாழ்வான பகுதிகளில் நீர் தேக்கம் ஏற்பட்டுள்ளது. மழை பாதிப்புகளில் இதுவரை 14 பேர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை காலை, நேபாளத்தின் மத்தியப் பகுதியில் பாயும் நாராயணி ஆற்றில் வெள்ளநீர் அபாய அளவைத் தாண்டி பாய்ந்தது. இதையடுத்து, ஆற்றங்கரையோரங்களில் வசிக்கும் மக்களுக்கு நேபாள அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். சித்வான் பகுதிக்குச் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் மழையால் நிலச்சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்து முடங்கியது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் மீட்புப் பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன. மியாக்டி, பாக்லுங் உள்ளிட்ட மாவட்டங்களில் பாதிப்பு அதிகமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேபாளத்தில் பெரும்பாலான ஆறுகள் அபாய அளவைத் தாண்டி பாய்ந்து வருகின்றன. இதனிடையே, திபெத்–நேபாள எல்லையில் கடந்த மாதம் 26-ம் தேதி பனிப்பாறை ஏரி உடைந்ததன் விளைவாக, நேபாளத்தின் போடே கோசி, திரிசூலி ஆகிய ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பாறைகள், மண் மற்றும் சேறுடன் சீறிப்பாய்ந்த வெள்ளம், வீடுகள், சாலைகள், பாலங்கள், நீர்மின் திட்டங்கள் உள்ளிட்ட வழியில் இருந்த அனைத்தையும் அடித்துச் சென்றது. ரசுவா, நுவாகோட், தாதிங் ஆகிய மாவட்டங்கள் அந்தப் பெருவெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இந்தப் பெருவெள்ளத்தில் உள்நாட்டினர் மற்றும் வெளிநாட்டினர் என சுமார் 1,451 பேர் உயிரிழந்ததாகவும், சுமார் 5,000 பேர் காணாமல் போயுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சனிக்கிழமை வரை சுமார் 13,795 பேர் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.