Home செய்திகள் தேசிய செய்திகள் உ.பி. மாநிலங்களவைத் தேர்தலுக்கு 8 வேட்பாளர்கள்

உ.பி. மாநிலங்களவைத் தேர்தலுக்கு 8 வேட்பாளர்கள்

புதுடெல்லி, அக். 6-
உத்தரப் பிரதேசத்தில் 10, உத்தராகண்டில் ஒன்று, மேற்கு வங்கத்தில் ஒன்று என மொத்தம் 12 மாநிலங்களவை இடங்கள் விரைவில் காலியாக உள்ளன. இந்த இடங்களுக்கான தேர்தல் அக்டோபர் 16-ம் தேதி நடைபெற உள்ளது. ஓய்வுபெறும் உறுப்பினர்களில் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, அருண் சிங், நீரஜ் சேகர், பிரிஜ்லால், மத்திய இணை அமைச்சர் பி.எல். வர்மா, சீமா துவிவேதி ஆகிய பாஜக தலைவர்களும், சமாஜ்வாதி கட்சியின் ராம் கோபால் யாதவும், பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த ஒரு உறுப்பினரும் அடங்குகின்றனர். உத்தரப் பிரதேசத்தில் காலியாகும் 10 இடங்களில் 8 இடங்கள் தற்போது பாஜகவிடம் உள்ளன. பாஜகவின் மத்திய தேர்தல் குழு ஒப்புதல் அளித்த 8 வேட்பாளர்களின் பட்டியலை, கட்சியின் தேசிய தலைமையகப் பொறுப்பாளர் தருண் சுக் வெளியிட்டார். அதில் தரம்பால் சிங், ராதாகாந்த் ஓஜா, பிரகாஷ் பால், வித்யாசாகர் சோன்கர், கோபி கிருஷ்ண பாண்டே, ராம் பிரதாப் சிங் சவுஹான் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். பிரியங்கா சிங் ராவத், ஸ்ருதி கங்க்வார் ஆகிய இரு பெண்களும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். தரம்பால் சிங், பிரகாஷ் பால், ஸ்ருதி கங்க்வார் ஆகியோர் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள். வித்யாசாகர் சோன்கர், பிரியங்கா சிங் ராவத் ஆகியோர் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள். இந்தத் தேர்வு, 2027 சட்டப்பேரவைத் தேர்தலைக் கருத்தில் கொண்ட சமூகக் கணக்கீடாகக் கருதப்படுகிறது. பட்டியல் வெளியானதும் முதல்வர் யோகி ஆதித்யநாத் வேட்பாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். மாநிலங்களவையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 150 இடங்கள் உள்ளன. உத்தரப் பிரதேச சட்டப்பேரவையில் தற்போது 396 உறுப்பினர்கள் உள்ளனர். ஒரு வேட்பாளர் வெற்றி பெற 37 முதல் விருப்ப வாக்குகள் தேவை. இதன்படி சமாஜ்வாதி கட்சிக்கு இரண்டு இடங்கள் உறுதியாகும். மீதமுள்ள இடங்களில் பாஜக கூட்டணிக்கு 7 அல்லது 8 இடங்கள் கிடைக்கும் என மதிப்பிடப்படுகிறது. எட்டாவது இடத்துக்கான போட்டி கடுமையாக இருக்கும் என கூறப்படுகிறது.