
சென்னை, அக். 7-
மதுராந்தகம், தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நேற்று அமைதியாக நடைபெற்றது. மதுராந்தகத்தில் 86.26 சதவீதமும், தாராபுரத்தில் 80.30 சதவீதமும் வாக்குகள் பதிவாகின. கடந்த ஏப்ரலில் நடைபெற்ற சட்டப்பேரவை பொதுத்தேர்தலுடன் ஒப்பிடுகையில் இரு தொகுதிகளிலும் வாக்குப்பதிவு குறைந்துள்ளது. பொதுத்தேர்தலில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற மரகதம் குமரவேல், சத்யபாமா ஆகியோர் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து, ஆளுங்கட்சியான தவெகவில் இணைந்ததைத் தொடர்ந்து இத்தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. மதுராந்தகத்தில் மரகதம் குமரவேல் (தவெக), பரந்தாமன் (திமுக), கணிதா சம்பத் (அதிமுக), சுகந்தி (மார்க்சிஸ்ட்), ஜானகிராமன் (நாதக) உள்ளிட்ட 28 பேரும், தாராபுரத்தில் சத்யபாமா (தவெக), சுகன்யா (திமுக), பானுமதி (அதிமுக), லட்சுமணன் (இந்திய கம்யூனிஸ்ட்), கார்த்திகா (நாதக) உள்ளிட்ட 22 பேரும் போட்டியிட்டனர். காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மதுராந்தகத்தில் தொடக்கத்தில் இரண்டு மணி நேரம் வாக்குப்பதிவு மந்தமாக இருந்ததுடன், 7 இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரக் கோளாறு காரணமாக தாமதம் ஏற்பட்டது. பின்னர் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். தாராபுரம் கவுண்டச்சிபுதூர் வாக்குச்சாவடியில் பூத் ஏஜெண்ட் நியமனம் தொடர்பாக திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்ததால் சுமார் ஒரு மணி நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. கொழிஞ்சிவாடி வாக்குச்சாவடியில், பார்வைக் குறைபாடுள்ள 80 வயது மூதாட்டி ஒருவர் தேர்தல் அலுவலரின் உதவியுடன் வாக்களித்தார். பின்னர், தனது வாக்கு மாற்றிப் பதிவானதாக அவர் தெரிவித்ததையடுத்து, தேர்தல் அலுவலர் மாற்றப்பட்டார்; 45 நிமிடங்களுக்குப் பிறகு வாக்குப்பதிவு தொடர்ந்தது.மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்ததும் இயந்திரங்கள் வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு அனுப்பப்பட்டன. அக்டோபர் 9-ம் தேதி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியில் 80.81 சதவீத வாக்குப்பதிவு பதிவாகியது.













