
புதுடில்லி, அக். 9-
செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நோயாளிகளின் போலியான அனுபவங்கள், சிகிச்சை முடிவுகள் மற்றும் பரிந்துரைகளை உருவாக்க டாக்டர்களும் மருத்துவமனைகளும் கூடாது என தேசிய மருத்துவ ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ள ஆணையம், விதிமீறல்களுக்கு பணியிடை நீக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது. சமூக வலைதளங்கள் மற்றும் மருத்துவ விளம்பரங்களில் ஏ.ஐ. பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், மருத்துவ சேவைகள் குறித்த தவறான விளம்பரங்களைத் தடுக்கும் நோக்கில் இந்த விதிகள் வெளியிடப்பட்டுள்ளன.
பதிவு செய்யப்பட்ட டாக்டர்களும் மருத்துவமனைகளும் தங்கள் சேவைகளை விளம்பரப்படுத்த, நோயாளிகளை ஈர்க்க அல்லது நோய் கண்டறிதல், சிகிச்சை மற்றும் அதன் முடிவுகள் தொடர்பான தகவல்களைப் பரப்ப ஏ.ஐ. மூலம் உருவாக்கப்பட்ட உள்ளடக்கங்களைப் பயன்படுத்தக் கூடாது. நோயாளிகளின் செயற்கையான கருத்துகள், போலியான பரிந்துரைகள் மற்றும் மருத்துவ சேவைகளைத் தவறாகச் சித்தரிக்கும் காட்சிகளை உருவாக்கவும் ஏ.ஐ.யைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. உண்மையைவிட ஒரு மருத்துவ சேவையை மிகைப்படுத்திக் காட்டும் ஏ.ஐ. காட்சிகளையும் வெளியிடக் கூடாது. தேடுபொறிகள் மற்றும் செயலிகளில் தரவரிசையை மாற்ற பணம் செலுத்தவும், நோயாளிகளை அழைத்து வர சமூக ஊடகப் பிரபலங்கள், விளம்பர நிறுவனங்கள் அல்லது ஆன்லைன் தளங்களுடன் பணப்பரிவர்த்தனை ஒப்பந்தங்கள் செய்யவும் டாக்டர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.














