Home செய்திகள் தேசிய செய்திகள் நகர்ப்புற குடும்பங்களின் பொருளாதார நிலை மோசமடைவு

நகர்ப்புற குடும்பங்களின் பொருளாதார நிலை மோசமடைவு

மும்பை, அக். 9- நாட்டில் வசிக்கும் நகர்ப்புற குடும்பங்களில் 54 சதவீதத்துக்கும் அதிகமானோரின் பொருளாதார நிலை கடந்த ஓராண்டில் மோசமடைந்துள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. வேலைவாய்ப்பு மற்றும் விலைவாசி உயர்வு குறித்த கவலைகள், மக்களின் பொருளாதார நம்பிக்கையை பாதித்துள்ளதாகவும் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி சார்பில், ‘நகர்ப்புற நுகர்வோர் நம்பிக்கை ஆய்வு’ என்ற பெயரில் நாடு முழுவதும் உள்ள 19 முக்கிய நகரங்களில் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. கடந்த மாதம் நடைபெற்ற இந்தக் கருத்துக்கணிப்பில் 6,054 பேர் பங்கேற்றனர். ஆய்வு முடிவுகளை ரிசர்வ் வங்கி சமீபத்தில் வெளியிட்டது. நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார நிலை மோசமடைந்துள்ளதாக 54.5 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். இந்த விகிதம் ஜூலை மாதத்தில் 50.5 சதவீதமாகவும், கடந்த ஆண்டு செப்டம்பரில் 40.9 சதவீதமாகவும் இருந்தது. பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக 25.3 சதவீதம் பேர் கூறியுள்ளனர். ஜூலை மாதத்தில் இந்த விகிதம் 27.1 சதவீதமாக பதிவாகியிருந்தது. மக்களின் தற்போதைய பொருளாதார உணர்வை அளவிடும் தற்போதைய நிலை குறியீடு (சி.எஸ்.ஐ.) ஜூலை மாதத்தில் 88.3 புள்ளிகளாக இருந்தது. இது கடந்த மாதம் 87.9 புள்ளிகளாகக் குறைந்துள்ளது. அடுத்த ஆண்டில் பொருளாதார நிலை மேலும் மோசமடையும் என 38.3 சதவீதம் பேர் அச்சம் தெரிவித்துள்ளனர். இதனால், எதிர்கால எதிர்பார்ப்பு குறியீடும் 115.3 புள்ளிகளில் இருந்து 113.5 புள்ளிகளாகக் குறைந்துள்ளது. உணவு, எரிபொருள் உள்ளிட்டவற்றின் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களுக்கான நுகர்வோர் செலவினம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக நகர்ப்புற மக்கள் ஆடம்பரப் பொருட்கள் மற்றும் விருப்பம் சார்ந்த பிற பொருட்களுக்கான செலவினங்களைக் குறைத்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. வேலைவாய்ப்பும் பணவீக்கமும் தொடர்ந்து கவலைக்குரிய அம்சங்களாக இருப்பதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.