Home மாவட்டங்கள் சென்னை தொடர் விடுமுறையால் விமானக் கட்டணம் உயர்வு

தொடர் விடுமுறையால் விமானக் கட்டணம் உயர்வு

சென்னை: அக். 16-
ஆயுத பூஜை, தசரா பண்டிகையையொட்டி 4 நாட்கள் தொடர் விடுமுறை வருவதால், உள்நாட்டு விமானக் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது. இதனால் பண்டிகையை கொண்டாடுவதற்காக தங்களின் சொந்த ஊர்களுக்குச் செல்ல திட்டமிட்டுள்ள பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. சென்னையிலிருந்து மதுரை, கோவை, தூத்துக்குடி, திருச்சி, சேலம் செல்லும் விமானங்களின் கட்டணம் வழக்கத்தைவிட பல மடங்கு உயர்ந்துள்ளது.சென்னை–தூத்துக்குடி இடையே வழக்கமாக ரூ.7,201 கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில், இன்றைய கட்டணம் ரூ.17,363 ஆக உள்ளது. சென்னை–மதுரை இடையே வழக்கமான கட்டணம் ரூ.5,459 ஆக இருக்கும் நிலையில், இன்றைய கட்டணம் ரூ.8,537 ஆக உயர்ந்துள்ளது.
சென்னை–திருச்சி இடையே சாதாரண நாளில் ரூ.5,066 ஆக இருக்கும் விமானக் கட்டணம், இன்றைய தினம் ரூ.9,896 ஆக அதிகரித்துள்ளது. இதேபோல்,
சென்னை–கோவை இடையே வழக்கமாக ரூ.5,373 கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில், இன்றைய கட்டணம் ரூ.16,601 ஆக உயர்ந்துள்ளது.
சென்னை–சேலம் இடையே வழக்கமான விமானக் கட்டணம் ரூ.4,264 ஆக இருக்கும் நிலையில், இன்றைய கட்டணம் ரூ.12,23 ஆக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பண்டிகை கால தொடர் விடுமுறையையொட்டி பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், முக்கிய உள்நாட்டு வழித்தடங்களில் விமானக் கட்டணம் உயர்ந்திருப்பது பயணிகளுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், சென்னையிலிருந்து பெங்களூரு, ஐதராபாத், விஜயவாடா, திருவனந்தபுரம், கொச்சி, மும்பை, டெல்லி செல்லும் விமானங்களிலும் கட்டணம் பல மடங்கு அதிகரித்தே காணப்படுகிறது. இதனால், பண்டிகை நாட்களில் சொந்த ஊர்களுக்குச் செல்ல விரும்பும் பயணிகள் விமானக் கட்டண உயர்வால் பாதிக்கப்பட்டுள்ளனர்.