
மைசூர், அக். 16-
உலகப் புகழ்பெற்ற மைசூரு தசரா விழாவில் கம்பீரமாகச் செல்லும் ‘அபிமன்யு’ என்ற யானையின் பாகனாகப் பணியாற்றி வருபவர் வசந்த். இவரது மனைவி அம்பிகா (வயது 35).
கடந்த ஒரு ஆண்டாகக் கடும் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அம்பிகா, உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தசரா விழாவிற்கு வராமல் அம்பிகா சொந்த ஊரிலேயே தங்கியிருந்தார். மனைவியின் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததைத் தொடர்ந்து, பாகன் வசந்த் இரண்டு நாட்களுக்கு முன்பே தசரா முகாமில் இருந்து அவசரமாகச் சொந்த ஊருக்குப் புறப்பட்டுச் சென்றார்.தற்போது பாகன் வசந்த் இல்லாத நிலையில், ‘காவாடி’ ராஜு என்பவர் அபிமன்யு யானையைப் பராமரிக்கும் பொறுப்பை ஏற்று கவனித்து வருகிறார்.













