Home செய்திகள் தேசிய செய்திகள் மனைவியை பீர் பாட்டிலால் அடித்துக் கொன்ற கணவன் போலீசில் சரண்

மனைவியை பீர் பாட்டிலால் அடித்துக் கொன்ற கணவன் போலீசில் சரண்

an Indian or Asian person laying on floor dead during COVID-19 or corona virus outbreak with selective focus or shallow depth of field

மதனப்பள்ளை, அக். 16:
ஆந்திர மாநிலம் மதனப்பள்ளியில் உள்ள தனியார் லாட்ஜில், தகாத தொடர்பு சந்தேகத்தின் பேரில் கர்நாடகப் பெண்ணை பீர் பாட்டிலால் அடித்துக் கொன்ற கணவன், நேராக காவல் நிலையத்தில் சரணடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோலார் மாவட்டம் முளபாகிலை சேர்ந்தவர் பைக் மெக்கானிக் ஷேக் நவீத் பாஷா (எ) நவீன் பாஷா. இவரது மனைவி ரூபியா தாஜ் (29). இவர்களுக்கு 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்து, நான்கு குழந்தைகள் உள்ளனர். மனைவியின் நடத்தையின் மீதான சந்தேகத்தால் தம்பதிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு, இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.
இந்நிலையில், உறவினர்கள் நடத்திய சமரசப் பேச்சுவார்த்தையை அடுத்து, நவீத் பாஷா பளமனேருக்குச் சென்று மனைவியை சந்தித்து சித்தூரில் ஷாப்பிங் செய்துள்ளார். இரவு நேரம் என்பதால் மதனப்பள்ளிக்கு வந்து ஒரு தனியார் லாட்ஜில் அறை எடுத்து தங்கியுள்ளனர்.
அங்கு நள்ளிரவில் மீண்டும் தகாத தொடர்பு விவகாரம் குறித்து இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் வெடித்துள்ளது. ஆத்திரமடைந்த நவீத் பாஷா, அங்கிருந்த பீர் பாட்டிலால் மனைவியின் தலையில் பலமாக தாக்கியதுடன், உடைந்த பாட்டிலால் கழுத்தை அறுத்துத் துடிதுடிக்கக் கொன்றுள்ளார்.
படுகொலையை அரங்கேற்றிய பின், நேற்று காலையில் நேராக மதனப்பள்ளை டவுன் காவல் நிலையத்திற்குச் சென்ற நவீத் பாஷா, தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டு போலீசாரிடம் சரணடைந்தார். தகவலறிந்த போலீசார் லாட்ஜை ஆய்வு செய்து சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்; மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.