
பெங்களூர்: அக். 16-
பெங்களூரு அருகே வீசா காலம் முடிந்தும் தங்கியிருந்த நைஜீரிய நாட்டுக்காரர், பாதுகாப்புக்கு நின்ற போலீசார் மீது திடீரென வெறித்தனமாகத் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வெளிநாட்டவர் முகாமில் ரகளை
பெங்களூரு அடுத்துள்ள நெலமங்கலா சோண்டிகொப்பா பகுதியில், வீசா காலம் முடிந்த வெளிநாட்டினரை அடைத்து வைக்கும் சிறப்பு மையம் இயங்கி வருகிறது. இங்கு நைஜீரியாவைச் சேர்ந்த கெவின் ஜேம்ஸ் என்பவர் அடைக்கப்பட்டிருந்தார். இவர் மீது ஏற்கனவே போதைப்பொருள் கடத்தல், கொலை முயற்சி என பல வழக்குகள் உள்ளன.
போலீசார் மீது தாக்குதல்
இந்த நிலையில், “எனக்கு ஜாமீன் கிடைத்துவிட்டது, என்னை உடனே வெளியே விடுங்கள்” என்று கூறி கெவின் ஜேம்ஸ் அங்குள்ள அதிகாரிகளிடம் தகராறு செய்துள்ளார்.
திடீரென ஆத்திரமடைந்த அவர், அங்கிருந்த உதவி ஆய்வாளர் (ஏ.எஸ்.ஐ.) மற்றும் காவலர் ஆகிய இருவரையும் சரமாரியாகத் தாக்கி ரகளையில் ஈடுபட்டார்.
மருத்துவமனையில் அனுமதி
இதில் படுகாயமடைந்த இரு போலீசாரும் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து மாதாநாயகனஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து, வெறியாட்டம் ஆடிய நைஜீரியா ஆசாமியிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.













