
பெங்களூர்: அக். 16-
பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள முன்னாள் எம்பி பிரஜ்வல் ரேவண்ணாவிடம் மொபைல் சிக்கிய வழக்கு விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ள போலீசார், முதல் குற்றவாளி பிரதாப் மற்றும் இரண்டாம் குற்றவாளியான பிரஜ்வல் ரேவண்ணாவை நேருக்கு நேர் உட்கார வைத்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியுள்ளனர். சிறையில் உள்ள பிரஜ்வலை விசாரித்த போலீசார், மொபைல் பாஸ்வேர்ட் தருமாறு கேட்டதுடன், பென்டிரைவ், நோட்டுப் புத்தகம் மற்றும் அதில் பதிவாகியிருந்த தொலைபேசி எண்கள் குறித்தும் கேள்விகளை எழுப்பியுள்ளனர். சிறைக்குள் மொபைல் எப்படி வந்தது, அதை யார் கொண்டு கொடுத்தது, சிம் கார்டு கொடுத்தது யார் மற்றும் பென்டிரைவில் உள்ள தகவல்கள் என்ன என்பது குறித்துப் போலீசார் துருவித் துருவி விசாரித்து வருகின்றனர். மொபைல் பாஸ்வேர்ட் மற்றும் அது சிறைக்குள் நுழைந்த வழித்தடம் குறித்த முழுமையான தகவல்களைச் சேகரிக்கக் காவல்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர். இதனிடையே, சிறையில் சிசிபி சோதனை நடத்தியபோது பிரஜ்வல் ரேவண்ணாவிடம் மொபைல், பென்டிரைவ், சிம் மற்றும் நோட்டுப் புத்தகம் சிக்கியது. ஆரம்பத்தில் அந்த மொபைல் தன்னுடையதுதான் என்று கூறிய பிரஜ்வல், பின்னர் தன் நிலையை மாற்றி அது பிரதாப்புக்குச் சொந்தமானது என்று உல்டா அடித்தார்; மேலும் பாஸ்வேர்ட் தராமலும் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை. இதனால் மொபைல் மற்றும் பென்டிரைவை எப்எஸ்எல் சோதனைக்கு அனுப்பிவிட்டு, நேற்று பிரஜ்வைக் கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார், தற்போது இரண்டு நாட்கள் பாடி வாரண்டில் காவலில் எடுத்துப் பரப்பன அக்ரஹார காவல் ஆய்வாளர் நவீன் தலைமையில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.













