Home மாவட்டங்கள் சென்னை கோவையில் முதல்-அமைச்சர் விஜய் ரோடு ஷோ

கோவையில் முதல்-அமைச்சர் விஜய் ரோடு ஷோ

கோவை: அக். 16-
கோவை காந்திபுரத்தில் ரூ.300 கோடி மதிப்பில், 1 லட்சத்து 98 ஆயிரம் சதுர அடி பரப்பளவில், 7 தளங்களுடன் ‘பெரியார் அறிவுலகம்’ என்ற பெயரில் பிரமாண்ட நூலகம் கட்டப்பட்டுள்ளது. இங்கு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. மாணவ-மாணவிகள் பயன்பெறும் வகையில் அறிவியல் மையமும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நூலகத்தை முதல்-அமைச்சர் விஜய் திறந்து வைக்கிறார்.
இதற்காக சென்னையில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்ட முதல்-அமைச்சர் விஜய், கோவை விமான நிலையத்தை வந்தடைந்தார். அங்கு அவரை அமைச்சர்கள், கலெக்டர், அதிகாரிகள் மற்றும் த.வெ.க.வினர் வரவேற்றனர். தொடர்ந்து, அவினாசி சாலை வழியாக விழா நடைபெறும் காந்திபுரத்துக்கு 11.4 கிலோமீட்டர் தூரம் ரோடு ஷோவில் அவர் பங்கேற்று பொதுமக்களை சந்தித்தார்.
முதல்-அமைச்சர் செல்லும் வழியெங்கும் சாலையின் இருபுறமும் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்தனர். த.வெ.க. சார்பில் வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில், பொதுமக்களும் காலை முதலே ஆர்வத்துடன் காத்திருந்தனர். அவரது கார் வந்தபோது மேளதாளங்கள் முழங்க, பூக்களைத் தூவியும், உற்சாக முழக்கங்களை எழுப்பியும் மக்கள் வரவேற்றனர். அவர்களைப் பார்த்து கையசைத்தபடி முதல்-அமைச்சர் விஜய் வரவேற்பை ஏற்றுக்கொண்டார்.
நூலகத்துக்குச் செல்லும் அவர், முகப்பில் உள்ள பெரியார் சிலை மற்றும் ‘பெரியார் அறிவுலகம்’ கல்வெட்டை திறந்து வைக்கிறார். தொடர்ந்து வரவேற்பறை, அறிவியல் மையம், குழந்தைகள் நூலகம், புத்தகம் படிக்கும் பிரிவு மற்றும் டிஜிட்டல் நூலகம் ஆகியவற்றை பார்வையிடுகிறார். பின்னர் விழா மேடையில் அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் அவரை வரவேற்று நினைவுப்பரிசு வழங்குகின்றனர்.
இதையடுத்து கோவை மாவட்டத்தில் முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுவதுடன், 100 பேருக்கு நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்குகிறார். முதல்-அமைச்சராக பதவியேற்ற பின் கோவையில் நடைபெறும் அரசு விழாவில் விஜய் முதன்முறையாக பங்கேற்கிறார். அவரது வருகையையொட்டி விமான நிலையம் முதல் காந்திபுரம் நூலகம் வரை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மக்கள் கூடும் இடங்களில் கூடுதல் போலீசார் கண்காணிப்பில் உள்ளனர். அந்தப் பகுதியில் டிரோன்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.