Home மாவட்டங்கள் சென்னை அனிருத்– காவ்யா மாறன் திருமணம் உறுதி

அனிருத்– காவ்யா மாறன் திருமணம் உறுதி

சென்னை: அக். 17–-
பிரபல இசையமைப்பாளர் அனிருத் – சன்ரைசர்ஸ் அணியின் தலைமைச் செயல் அதிகாரி காவ்யா மாறனும் விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தெலங்கானா முதல்-மந்திரி ஏ. ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார். இதுதொடர்பான தகவலை, இரு குடும்பங்களும் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதற்கு முன்பாகவே அவர் வெளியிட்டுள்ளார்.
சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறனும், அவரது மனைவி காவேரி மாறனும் ஜூபிலி ஹில்ஸில் உள்ள தனது இல்லத்தில் தன்னைச் சந்தித்து, மகள் காவ்யாமாறன் திருமண வரவேற்புக்கு அழைப்பு விடுத்ததாக ரேவந்த் ரெட்டி சமூக வலைதளமான எக்ஸில் பதிவிட்டுள்ளார். மேலும், “காவ்யா –அனிருத் திருமண வரவேற்பு நவம்பர் 21-ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம், பல மாதங்களாக நிலவி வந்த வதந்திகளுக்கு அதிகாரப்பூர்வ உறுதி கிடைத்துள்ளது.
அனிருத் மற்றும் காவ்யா இருவரும் காதலித்து வருவதாகவும், அவர்களது குடும்பத்தினர் திருமணம் குறித்து பேசி வருவதாகவும் 2025-ஆம் ஆண்டு ரெடிட் பதிவொன்றில் தெரிவிக்கப்பட்டது. அப்போது அந்த வதந்திக்கு பதிலளித்த அனிருத், “திருமணமா? சிரிப்பாக இருக்கிறது. அமைதியாக இருங்கள். வதந்திகளைப் பரப்புவதை நிறுத்துங்கள்” என்று சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.
எனினும், கடந்த ஜூன் மாதம் அனிருத்தின் மாமாவும் நடிகருமான ஒய்.ஜி. மகேந்திரா, “அவர் மிகப் பெரிய திருமண வாழ்க்கைக்குள் செல்ல உள்ளார். அது உறுதியானது என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் திருமணம் செய்து கொள்ள உள்ளனர்” என்று கூறியிருந்தார். காவ்யா, சாதாரண பெண் அல்ல என்றும், சன்ரைசர்ஸ் அணியை நிர்வகிக்கும் திறமையும் கடின உழைப்பும் கொண்டவர் என்றும் அவர் பாராட்டினார். திருமணம் கிரீஸில் நடைபெறலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. அழைப்பிதழ்கள் முக்கிய பிரமுகர்களிடம் நேரடியாக வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அனிருத், ‘தி பாரடைஸ்’, ‘ஜெயிலர் 2’ படங்களுக்கு இசையமைத்துள்ளார். ‘கிங்’, ‘தர்மன்’, ‘இந்தியன் 3’ உள்ளிட்ட படங்களும் அவரது வரிசையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது