
வாஷிங்டன்: அக். 17–-
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் மற்றும் கியாஸ் வாங்கும் நாடுகளுக்கு 100 சதவீதம் வரை வரி விதிக்கும் நடைமுறையை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளார். இந்த வரி அக்டோபர் 18-ஆம் தேதி முதல் அமலுக்கு வர இருந்த நிலையில், இந்தியா மற்றும் சீனா அதிகளவில் பாதிக்கப்படும் சூழல் உருவானது.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருவதால், ரஷ்யா மீது அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன. எனினும், இந்தியாவும் சீனாவும் தொடர்ந்து ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கி வருகின்றன. இதற்காக இந்தியாவை டிரம்ப் கடுமையாக விமர்சித்திருந்தார். ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதன் மூலம், உக்ரைன் மீதான போருக்கு இந்தியா பணம் செலுத்துவதாகவும் அவர் கூறியிருந்தார்.
இதையடுத்து, ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் மற்றும் கியாஸ் வாங்கும் முக்கிய 5 நாடுகளுக்கு 100 சதவீதம் வரை வரி விதிக்க அமெரிக்க நிர்வாகம் முடிவு செய்தது. இதற்காக நிறைவேற்றப்பட்ட ‘லிண்ட்சே ஓ கிரஹாம் ரஷ்ய தடைச் சட்டம் 2026’ சட்டமாக்கப்பட்டது. அந்தச் சட்டத்தின் கீழ், ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் 100 சதவீதம் வரை வரி விதிக்க முடியும். இந்நிலையில், இந்தியா மீது வரி அமல்படுத்தப்படுவதற்கு ஒரு நாள் முன்னதாக, ரஷ்ய எண்ணெய் தொடர்பான தடைகளை டிரம்ப் தளர்த்தினார். இதுதொடர்பான ஆவணத்தில் கையெழுத்திட்ட அவர், “கிரஹாம் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள தடைகள், கட்டுப்பாடுகள் மற்றும் வரிகளின் பயன்பாட்டை நான் தள்ளுபடி செய்கிறேன்” என்று தெரிவித்தார். அமெரிக்காவில் டீசல் விலை அதிகரித்துள்ளதும், நவம்பர் 3-ஆம் தேதி இடைக்காலத் தேர்தல் நடைபெற உள்ளதும் டிரம்புக்கு சிக்கலை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் ரஷ்யாவிடம் இருந்து டீசல் வாங்க அமெரிக்கா ஒப்பந்தம் செய்துள்ளதாகவும், அந்தச் சூழலில் இந்தியா, சீனாவுக்கு 100 சதவீத வரி விதிப்பது முரண்பாடாக இருக்கும் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.













