
புதுடெல்லி: அக். 23-
பாகிஸ்தானில் நடைபெற்றுவரும் பாகிஸ்தான், இங்கிலாந்து, இலங்கை அணிகள் மோதும் முத்தரப்பு ஒருநாள் தொடரில் நேற்று ராவல்பிண்டியில் நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து அதிரடியாகக் குவித்த 429 ரன்களை இலங்கை அணி வெற்றிகரமாக 430 ரன்கள் எடுத்து சேஸ் செய்து, அபார வெற்றி பெற்று வரலாறு படைத்துள்ளது.தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டி ஒன்றில் 435 ரன்கள் இலக்கை தென் ஆப்பிரிக்கா சேஸ் செய்து வென்றதற்குப் பிறகு மிகப்பெரிய விரட்டலை வெற்றிகரமாக சாதித்த அணி என்ற சாதனையை இலங்கை அணி நேற்று நிகழ்த்தியது.
இங்கிலாந்து கேப்டன் ஹாரி புரூக் வரலாறு காணாத இங்கிலாந்தின் முதல் ஒருநாள் இரட்டை சதத்தை சாதித்தார். அவர் 116 பந்துகளில் 21 பவுண்டரிகள் 10 சிக்ஸர்களுடன் 202 ரன்கள் விளாச இங்கிலாந்து முதலில் பேட் செய்து 50 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 429 ரன்கள் எடுத்தது.தொடர்ந்து ஆடிய இலங்கை அணி அவிஷ்கா பெர்னாண்டோவின் 97, பவன் ரத்னாயக்கேயின் 130, தசுன் ஷனகாவின் 97 (50 பந்துகள்), ஜனித் லியனாகேவின் 61 ரன்கள் போன்ற அதிரடி இன்னிங்ஸ்களினால் ஒரு பந்து மீதம் வைத்து 8 விக்கெட் இழப்புக்கு 430 ரன்கள் என்று வெற்றி பெற்றது. அதுவும் ஜாஷ் டங் கடைசி ஓவரில் 2 விக்கெட்டுகளை அடுத்தடுத்து குச்சியைப் பெயர்த்து எடுத்து ஹாட்ரிக் சாதனையில் இருந்தும், 5-வது பந்தில் ஸ்ட்ரைக்கிற்கு வந்த லியனாகே, ஜாஷ் டங்கை லாங் ஆஃப் மேல் சிக்ஸ் அடித்து வெற்றி பெற்றது உண்மையில் மயிர்க்கூச்செறியும் வெற்றியாக அமைந்தது.
















