
சென்னை, அக். 21-
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் தமிழ்நாடு – உத்தராகண்ட் அணிகள் இடையிலான ஆட்டம் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வந்தது. இதன் முதல் இன்னிங்ஸில் உத்தராகண்ட் 56.2 ஓவர்களில் 134 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதேவேளையில் தமிழக அணி 109 ஓவர்களில் 313 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக பிரதோஷ் ரஞ்ஜன் பால் 136, பாபா இந்திரஜித் 77 ரன்கள் விளாசினர். 179 ரன்கள் பின்தங்கிய நிலையில் நேற்று 3-வது நாள் ஆட்டத்தை விளையாடிய உத்தராகண்ட் அணி 45.4 ஓவர்களில் 113 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக தேகா நிஷ்சல் 25, லக்சயா ராய்சந்தானி 19, அவ்னீஷ் சுதா 18 ரன்கள் சேர்த்தனர். தமிழக அணி தரப்பில் கேப்டன் சாய் கிஷோர் 16 ஓவர்களை வீசி 5 மெய்டன்களுடன் 34 ரன்களை வழங்கி 6 விக்கெட்களை வீழ்த்தினார். இதில் ஹாட்ரிக் விக்கெட்களும் அடங்கும். 43-வது ஓவரை வீசிய சாய் கிஷோர் கடைசி 3 பந்துகளில் தொடர்ச்சியாக லக்சயா ராய்சந்தானி, சவுரப் ராவத், ஆதித்யா ராவத் ஆகியோரை ஆட்டமிழக்கச் செய்தார். சாய் கிஷோருக்கு உறுதுணையாக வீசிய அஜித் ராம் 4 விக்கெட்களை கைப்பற்றினார். இன்னிங்ஸ் மற்றும் 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தமிழக அணிக்கு ஒரு போனஸ் புள்ளியுடன் 7 புள்ளிகள் வழங்கப்பட்டன.
















