Home செய்திகள் தேசிய செய்திகள் இந்தோ-திபெத் எல்லைக் காவல் படைக்கு பிரதமர் பாராட்டு

இந்தோ-திபெத் எல்லைக் காவல் படைக்கு பிரதமர் பாராட்டு

புதுடெல்லி, அக். 24- இந்தோ-திபெத் எல்லைக் காவல் படையின் நிறுவன தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், படையினர் அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இந்தோ-திபெத் எல்லைக் காவல் படையினர் தங்களது வீரத்தின் மூலம் தனி முத்திரையைப் பதித்துள்ளதாக பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். அவர்கள் எதிர்கொள்ளும் ஒவ்வொரு சவாலையும் உறுதியுடன் சமாளித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார். படையினரின் தன்னலமற்ற சேவையும், தியாகங்களும் தேசத்துக்கு பெரும் ஊக்கமளிப்பதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், இந்தோ-திபெத் எல்லைக் காவல் படையின் நிறுவன தினத்தையொட்டி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். பனி படர்ந்த மலைகளில் படையினரின் வீர முழக்கம் எதிரொலிப்பதாகவும், நாட்டின் பாதுகாப்புக்கு வரும் அனைத்து அச்சுறுத்தல்களையும் அவர்கள் தவிடுபொடியாக்கி வருவதாகவும் அமித்ஷா கூறியுள்ளார். மிகக் கடுமையான காலநிலையிலும் இந்தோ-திபெத் எல்லைக் காவல் படையினர் உறுதியுடன் பணியாற்றி வருவதாக அவர் தெரிவித்துள்ளார். நாட்டுக்காக தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்த வீரர்களுக்கு வீரவணக்கத்தையும் அமித்ஷா செலுத்தியுள்ளார். பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டுள்ள செய்தியில், மிகக் கடுமையான தட்பவெப்ப நிலைகளிலும் இந்தியாவின் எல்லைகளைப் பாதுகாப்பதில் இந்தோ-திபெத் எல்லைக் காவல் படையினர் முக்கியப் பங்காற்றியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இடதுசாரி தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகள் உள்ளிட்ட நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்புப் பணிகளிலும் அவர்கள் முக்கிய பங்கு வகித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். துணிச்சலுடனும் அர்ப்பணிப்புடனும் படையினர் நாட்டுக்குச் சேவை செய்து வருவதாக ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.