Home செய்திகள் உலக செய்திகள் ஹார்முஸ் ஜலசந்தி அமெரிக்க கட்டுப்பாட்டில்: ட்ரம்ப்

ஹார்முஸ் ஜலசந்தி அமெரிக்க கட்டுப்பாட்டில்: ட்ரம்ப்

வாஷிங்டன், அக். 24-
ஹார்முஸ் ஜலசந்தி முழுமையாக அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, அக்டோபர் மாதத்தில் ஹார்முஸ் பகுதியில் வர்த்தகக் கப்பல்கள் மீதான தாக்குதல்கள் கணிசமாக அதிகரித்துள்ளதாக கடல்சார் பாதுகாப்பு அமைப்புகள் தெரிவித்துள்ளன. செய்தியாளர்களை சந்தித்த ட்ரம்ப், “நாம் எதை விரும்புகிறோமோ அதை அடைகிறோம். ஹார்முஸ் ஜலசந்தி என்பது முற்றிலும் எங்களுக்கு சொந்தமானது” என்றார். மேலும், தாங்கள் விரும்பினால் அந்தப் பிராந்தியத்தின் எண்ணெய் வளங்களையும், நாட்டின் பகுதியையும் கையகப்படுத்த முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார். கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி ஈரான் போர் தொடங்கியதில் இருந்து, ஹார்முஸ் பகுதியில் கப்பல் போக்குவரத்தில் பல்வேறு சிக்கல்கள் நிலவி வருகின்றன. கடந்த வியாழக்கிழமை நள்ளிரவில் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் சென்ற 7 எண்ணெய் டேங்கர் கப்பல்கள் தாக்குதலுக்கு உள்ளாகின. ஈரான் போர் தொடங்கிய பின்னர், ஒரே நாளில் அதிக எண்ணிக்கையிலான கப்பல்கள் சேதமடைந்தது இதுவே முதல் முறை என கூறப்படுகிறது. தங்களது அனுமதி அல்லது ஒருங்கிணைப்பு இன்றி எந்தக் கப்பலும் இந்தப் பாதையைக் கடக்கக் கூடாது என்றும், அதை மீறினால் தாக்குதல்கள் தீவிரப்படுத்தப்படும் என்றும் ஈரானின் புரட்சிகர காவல்படை எச்சரித்துள்ளது. கடல்சார் பாதுகாப்பு தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு வரும் வாஷிங்டன் திங்க் டேங்க் வெளியிட்ட தரவுகளின்படி, கடந்த 201-ஆம் ஆண்டுக்குப் பிறகு வர்த்தகக் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட அதிகபட்ச தாக்குதல்கள் இந்த அக்டோபர் மாதத்தில்தான் பதிவாகியுள்ளன. இதுகுறித்து அந்த அமைப்பின் மூத்த ஆய்வாளர் நோவாம் ராய்டன் கூறுகையில், ஹார்முஸ் பகுதியில் அதிக கப்பல் தாக்குதல்கள் நடந்த மாதமாக அக்டோபர் பதிவாகியுள்ளது என்றார். பிரிட்டன் கடற்படையின் வர்த்தகப் போக்குவரத்துப் பிரிவும் கப்பல்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளதை உறுதி செய்துள்ளது.