
புதுடெல்லி: அக். 24-
ஓட்டுநர் உரிமம் வழங்கும் நடைமுறையில் அதிரடி மாற்றங்களை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஓட்டுநர் உரிமம் வழங்கும் நடைமுறையில் பெரும் மாற்றங்களைப் பரிந்துரைத்து, மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் ஒரு வரைவு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:- ஓட்டுநர் உரிமங்களில் உரிமையாளரின் ரத்தவகை, செல்போன் எண், அவசரத் தொடர்பு விவரங்கள் இடம்பெறுவது கட்டாயம். விண்ணப்பதாரர்கள் இணையவழி ஆதார் சரிபார்ப்பு மூலம் முகவரி, பெயர் மற்றும் தொடர்பு எண் மாற்றங்கள் உள்ளிட்ட குறிப்பிட்ட ஓட்டுநர் உரிமச் சேவைகளைப் பயன்படுத்திக் கொண்டால், அதற்கான கட்டணங்கள் தள்ளுபடி செய்யப்படும். இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டினருக்கு தனித்தனி வண்ணக் குறியீட்டு ஓட்டுநர் உரிமங்களை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.புதிய நடைமுறையின் கீழ் முகவரி, வயது மற்றும் அடையாளச் சான்றுகளுக்காக தனித்தனி ஆவணத் தொகுப்புகள் கட்டாயமாக்கப்படும்.
வயதுச் சான்றுகளில் பாஸ்போர்ட், பள்ளி மதிப்பெண் சான்றிதழ், பிறப்புச் சான்றிதழ் மற்றும் அரசுத் துறைகளால் வழங்கப்படும் அடையாள அட்டைகள் ஆகியவை அடங்கும். ஆதார், பாஸ்போர்ட், இ-ரேஷன் அட்டை மற்றும் பான் கார்டு ஆகியவை ஏற்றுக்கொள்ளக்கூடிய அடையாளச் சான்றுகளாகும்.இந்த முன்மொழிவின்படி, பாதுகாப்பான ஓட்டுநர் பயிற்சி குறைந்தது 30 நிமிடங்கள் நீடிக்க வேண்டும். அதே சமயம், இணையவழி பாதுகாப்பான ஓட்டுநர் பயிற்சி மதிப்பீட்டுக்கான தேர்ச்சி மதிப்பெண் தற்போதுள்ள 60%-லிருந்து 75%-ஆக உயர்த்தப்படும். உரிமம் வழங்கும் அதிகாரிகள், பெயர் மற்றும் முகவரி உள்ளிட்ட ஓட்டுநர் உரிம விவரங்களை மாற்றுவதற்கான இணையவழி விண்ணப்பங்களை, நிராகரிப்பதற்கான காரணங்களைக் குறிப்பிட்டு, 15 நாட்களுக்குள் அங்கீகரிக்கவோ அல்லது நிராகரிக்கவோ வேண்டும். இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.













