Home மாவட்டங்கள் பெங்களூர் கார் லாரி மோதல்: தம்பதி உள்பட 4 பேர் பலி

கார் லாரி மோதல்: தம்பதி உள்பட 4 பேர் பலி

சிவமோகா, அக். 24:
சிவமோகா மாவட்டம் ஷிகாரிபுரா தாலுகா தரலகட்டா கிராமம் அருகே நேற்றிரவு காரும், பாக்கு ஏற்றி வந்த கேன்டர் வாகனமும் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இதில் தம்பதி உள்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஒருவர் பலத்த காயமடைந்தார்.
சிவமோகாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவிட்டு, ஷிகாரிபுரா தாலுகா முத்தகி கிராமத்தைச் சேர்ந்த உஜ்ஜப்பா (வயது 77), அவருடைய மனைவி லலிதம்மா (65), ஹாவேரி மாவட்டம் ஹிரேகேரூர் தாலுகா சோமனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த ஜெயம்மா (64), அவருடைய கணவர் ஹனுமந்தப்பா மற்றும் கார் டிரைவர் சித்து வால்மீகி (35) ஆகியோர் காரில் ஊருக்குத் திரும்பிச் சென்றுகொண்டிருந்தனர்.
தரலகட்டா கிராமம் அருகே கார் வந்து கொண்டிருந்தபோது, எதிரே பாக்கு மூடைகளை ஏற்றி வந்த கேன்டர் வாகனம் எதிர்பாராதவிதமாக கார் மீது பலமாக மோதியது.இந்த பயங்கர மோதலில் கார் பலத்த சேதமடைந்தது. இதில் கார் டிரைவர் சித்து வால்மீகி, லலிதம்மா ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர்.தகவலறிந்து வந்த காவல்துறையினர், உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த உஜ்ஜப்பா, ஜெயம்மா மற்றும் ஹனுமந்தப்பா ஆகிய 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக சிவமோகாவில் உள்ள மெக்கான் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இருப்பினும், அங்கு சிகிச்சை பலனின்றி உஜ்ஜப்பா மற்றும் ஜெயம்மா ஆகிய இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
போலீசார் விசாரணை:
படுகாயமடைந்த ஹனுமந்தப்பாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து ஷிகாரிபுரா கிராமப்புற போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.