
பெங்களூர், அக். 24-
குற்றப் பின்னணி கொண்ட ஒரு நபரை ரவுடி பட்டியலில் சேர்ப்பதற்கு முன்பு அல்லது அதை நீட்டிப்பதற்கு அவர் மீது பதிவாகியுள்ள வழக்குகளின் தற்போதைய சட்டப் பூர்வ நிலையை காவல்துறை கட்டாயமாக சரிபார்க்க வேண்டும் என்று கர்நாடக உயர்நீதிமன்றம் மாநில காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
பழைய மற்றும் அரைகுறையான தகவல்களின் அடிப்படையில் ரெளடிஷீட் திறக்கப்படுவதைத் தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக வழக்குகளின் சமீபத்திய நிலையைச் சரிபார்ப்பதை கட்டாயமாக்கி நிர்வாக சுற்றறிக்கை வெளியிட வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
துமகூருவைச் சேர்ந்த அந்தோணி டேவிட் ஜே. என்ற குட்டி என்பவருக்கு ரெளடிஷீட் திறக்க காவல்துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இந்த நோட்டீஸை எதிர்த்து அவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி சூரஜ் கோவிந்தராஜ் அடங்கிய தனிநீதிபதி அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
நபரின் கண்ணியத்திற்கு பாதிப்பு:
ஒருவர் மீது ரெளடிஷீட் திறப்பது அவருடைய கண்ணியம், கௌரவம், தனிப்பட்ட சுதந்திரம், வேலை, தொழில் மற்றும் சமூக வாழ்க்கை ஆகியவற்றில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். மேலும், அவர் தொடர் போலீஸ் கண்காணிப்புக்கு ஆளாக நேரிடும். எனவே, இத்தகைய நடவடிக்கையை எந்திரத்தனமாகவோ அல்லது வழக்கமான ஒன்றாகவோ செயல்படுத்த முடியாது என்று நீதிபதி கருத்து தெரிவித்தார்.
ரெளடிஷீட் திறப்பது தொடர்பான நோட்டீஸ் அனுப்பும் முன், வழக்கின் சமீபத்திய தகவல்களை சரிபார்த்து, அதற்கான ஆவணங்களை பராமரிக்க வேண்டும். டிஜிட்டல் அமைப்புகளில் தகவல்கள் கிடைக்கும் நிலையில், முழுமையற்ற தகவல்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அமர்வு தெளிவுபடுத்தியது.
டிஜிட்டல் தரவு ஒருங்கிணைப்பு:
போலீஸ் அதிகாரிகளுக்கு வழக்குகளின் உண்மையான மற்றும் புதுப்பிக்கப்பட்ட தகவல்கள் எளிதாகக் கிடைக்க, தற்போது பயன்பாட்டில் உள்ள முக்கிய டிஜிட்டல் அமைப்புகளின் தரவுகளை ஒருங்கிணைக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குற்றம் மற்றும் குற்றவாளிகள் கண்காணிப்பு நெட்வொர்க் சிஸ்டம்ஸ்நீதித்துறை அமைப்பு மற்றும் மின்-நீதிமன்றங்களின் தரவுகளை ஒன்றிணைப்பதற்கான சாத்தியக்கூறுகளை பரிசீலிக்க வேண்டும். இதன் மூலம் ஒரு நபர் மீதான வழக்குகளின் தற்போதைய நிலையை ஒரே அமைப்பில் சரிபார்க்கும் தொழில்நுட்பத்தை உருவாக்குவது குறித்து தேவையான நடவடிக்கை எடுக்குமாறு போலீஸ் கணினி பிரிவின் ஐ.ஜி.பி.க்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
மனுதாரரின் நோட்டீஸ் ரத்து:
துமகூருவைச் சேர்ந்த 26 வயதான அந்தோணி டேவிட் மீதான வழக்குகள் விடுவிக்கப்பட்ட போதிலும், எஃப்.ஐ.ஆர். நிலுவையில் இருப்பதாகக் கூறி காவல்துறை மீண்டும் ரெளடிஷீட் திறக்க நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதை எதிர்த்து அவர் உயர்நீதிமன்றத்தை அணுகினார்.
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், மனுதாரருக்கு எதிராக ரெளடிஷீட் திறக்க காவல்துறை பிறப்பித்த நோட்டீஸை ரத்து செய்து உத்தரவிட்டது.













