
சென்னை, அக். 25-
அரிசி வாங்கவே மக்கள் சிரமப்படும் நிலையில், விமான எரிபொருளுக்கு வரிச்சலுகை அளிப்பது ஏன் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தால் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் அன்றாட வாழ்க்கையை நடத்தவே போராடி வருகின்றனர். இந்நிலையில், விமான எரிபொருள் மீதான வரியைக் குறைப்பதற்கு தமிழக அரசு முன்னுரிமை அளித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.தவெக அரசு ஆட்சிக்கு வந்த 5 மாதங்களில், அத்தியாவசியப் பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளதாகவும், குறிப்பாக அரிசி விலை மூட்டைக்கு சுமார் ரூ.500 அதிகரித்துள்ளதாகவும் சீமான் தெரிவித்துள்ளார். பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளதால் மக்கள் கடுமையான நிதிச்சுமைக்கு ஆளாகியுள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் விமான எரிபொருள் மீதான வரி 29 சதவீதத்திலிருந்து 16 சதவீதமாகவும், பிற விமான நிலையங்களில் குறிப்பிட்ட விமான சேவைகளுக்கான வரி 29 சதவீதத்திலிருந்து 1 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது. விமான நிறுவனங்களின் செலவைக் குறைக்க அரசு காட்டும் அக்கறையை, மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் குறைப்பதிலும் காட்ட வேண்டாமா என அவர் கேள்வி எழுப்பினார்.














