Home மாவட்டங்கள் சென்னை இடைத்தேர்தல்: தயாராக இருக்க திமுக நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் உத்தரவு

இடைத்தேர்தல்: தயாராக இருக்க திமுக நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் உத்தரவு

சென்னை, அக். 25- ‘தமிழகத்தில் காலியாகவுள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ள நிலையில், தேர்தலை எதிர்கொள்ள நிர்வாகிகள் தயாராக இருக்க வேண்டும்’ என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் மதுராந்தகம், தாராபுரம், கரூர், பெருந்துறை, அம்பாசமுத்திரம், விராலிமலை, திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகள் காலியாக இருந்த நிலையில், முதற்கட்டமாக தாராபுரம், மதுராந்தகம் தொகுதிகளில் அக்.6-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இரண்டிலும் தவெக வெற்றி பெற்றது.

எஞ்சியுள்ள 5 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்துவதில் நீதிமன்ற வழக்குகள் காரணமாக சட்ட சிக்கல்கள் எழுந்தன. இந்த விவகாரத்தை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், 5 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் அறிவிப்பை வெளியிடுவதற்கு தற்காலிக தடை விதித்தது. இதனால், தேர்தல் ஆணையத்தால் உடனடியாக இடைத்தேர்தல் அறிவிப்பை வெளியிட முடியாத நிலை ஏற்பட்டது.

இந்நிலையில், இடைத்தேர்தல் அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம் என்பதால், 5 தொகுதிகளிலும் தேர்தல் பணிகளைத் தொடங்குமாறு திமுக நிர்வாகிகளுக்கு, மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அந்த வகையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று கரூர், பெருந்துறை, அம்பாசமுத்திரம், விராலிமலை, திருச்சி கிழக்கு ஆகிய 5 தொகுதிகளையும் சேர்ந்த கட்சி நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் திடீர் ஆலோசனை நடத்தினார். அப்போது, தொகுதிகளின் அரசியல்சூழல், கட்சியின் அமைப்பு ரீதியான தயார் நிலை, தேர்தல் பணிகளைத் திட்டமிடுதல், வேட்பாளர்தேர்வு உள்ளிட்ட அம்சங்கள்குறித்து ஆலோசிக்கப்பட்ட தாகக் கூறப்படுகிறது.