
சென்னை, அக். 26-
ரயில்வே கவுன்டர்களில் நேரடியாக முன்பதிவு செய்யும் பயணிகளுக்கும், விருப்பத்தின் பேரில் பயணக் காப்பீடு வழங்கும் திட்டத்தை ரயில்வே வாரியம் நீட்டித்துள்ளது. இந்த நடைமுறை அக்.27 முதல் அனைத்து ரயில்வே மண்டலங்களிலும் அமலுக்கு வருகிறது. உச்ச நீதிமன்றம் கடந்த 6-ம் தேதி வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, ரயில்வே வாரிய பயணிகள் சந்தைப்படுத்துதல் பிரிவு செயல் இயக்குநர் சிவேந்திர சுக்லா, அனைத்து மண்டல ரயில்வே மேலாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், காப்பீட்டைத் தேர்வு செய்யும் கவுன்டர் பயணிகள், அதற்கான பிரீமியத்தை டிஜிட்டல் முறையில் மட்டுமே செலுத்த வேண்டும் என்றும், அவர்களின் மொபைல் எண் கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காப்பீட்டு பாலிசி விவரங்கள், பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படும். இத்திட்டத்தை செயல்படுத்த ரயில்வே தகவல் தொழில்நுட்ப மையமான CRIS, இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகத்துடன் இணைந்து மென்பொருள் மாற்றங்களை மேற்கொண்டு வருகிறது. நடைமுறையை கோட்ட ரயில்வே மேலாளர்கள் மற்றும் வர்த்தக அதிகாரிகள் கண்காணிப்பார்கள். கவுன்டர் ஊழியர்களுக்கு உரிய ஆலோசனைகள் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஐஆர்சிடிசி இணையதளம் மூலம் ஆன்லைனில் டிக்கெட் பதிவு செய்வோருக்கு நடைமுறையில் உள்ள அதே விதிமுறைகள், நிபந்தனைகள் கவுன்டர் டிக்கெட்டுகளுக்கும் பொருந்தும். இதுவரை ஆன்லைன் இ-டிக்கெட் பயணிகளுக்கு மட்டும் வழங்கப்பட்ட இந்த விருப்பக் காப்பீட்டில், ஒரு பயணிக்கு 45 பைசா (வரிகள் உட்பட) பிரீமியம் வசூலிக்கப்படும். நான்கு பேருக்கு காப்பீடு தேர்வு செய்தால் ரூ.1.80 செலுத்த வேண்டும். தனி இருக்கை அல்லது படுக்கை பெறாத 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இதில் சேர்க்கப்படமாட்டார்கள்.















