
சென்னை, அக். 26-
விஜயதசமியை முன்னிட்டு, சென்னையில் 7 இடங்கள் உள்பட தமிழகம் முழுவதும் 100 இடங்களில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு பேரணிகள் நேற்று மாலை நடைபெற்றன. ஒவ்வொரு பகுதியிலும் நூற்றுக்கணக்கானோர் சீருடையில் கட்டுப்பாட்டுடன் பங்கேற்றனர். விஜயதசமியை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் 128 இடங்களில் அணிவகுப்பு பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த ஆர்எஸ்எஸ் அமைப்பினர் காவல் துறையிடம் அனுமதி கோரினர். காவல் துறை அனுமதி மறுத்ததைத் தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்றத்தை நாடினர். உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின் அடிப்படையில் பேரணி நடத்த உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதையடுத்து, முதற்கட்டமாக 100 இடங்களில் பேரணிகள் நடைபெற்றன.சென்னை எழும்பூரில் ரமடா ஹோட்டல் அருகே பேரணி தொடங்கியது. தொடக்க நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் கொடிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, ஆரத்தி காண்பிக்கப்பட்டது. பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கொடிக்கு ஆரத்தி எடுத்து மரியாதை செலுத்தினார். பின்னர் மேளதாளங்கள் முழங்க பேரணி புறப்பட்டது. மழை பெய்தபோதிலும் தொண்டர்கள் சீருடையில் பங்கேற்றனர். எல்.ஜி. சாலை, கூவம் ஆற்றுச்சாலை வழியாகச் சென்ற பேரணி, ராஜரத்தினம் மைதானம் அருகே நிறைவடைந்தது. தொடர்ந்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராமகிருஷ்ண மடத்தின் ‘ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம்’ இதழ் ஆசிரியர் சுவாமி அபவர்கானந்த மஹராஜ், ஆர்எஸ்எஸ் தென்பாரத செயற்குழு உறுப்பினர் ஆனந்த் ரகுநாதன், மாவட்டத் தலைவர் சுரேஷ் ரகுராமன் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர். பெரம்பூர் பெரவள்ளூர் சந்திப்பு அருகே நடைபெற்ற பேரணியை ஆர்எஸ்எஸ் தென்பாரத சேவைப் பொறுப்பாளர் பூ.மு.ரவிக்குமார் தொடங்கி வைத்தார். திருவொற்றியூர் காலடிப்பேட்டையில் நடைபெற்ற பேரணியை தென்பாரத தர்ம விழிப்புணர்வு அமைப்பாளர் ராம ராஜசேகர் தொடங்கி வைத்தார். ஐயப்பன்தாங்கல், கொரட்டூர், குரோம்பேட்டை, மேடவாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் பேரணிகள் நடைபெற்றன.














