
மும்பை, அக். 29-
மகாராஷ்டிராவில் கொலை மற்றும் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் கைதான நபருக்கு விசாரணை நீதிமன்றம் இரட்டை ஆயுள் தண்டனை விதித்தது. அந்த இரு ஆயுள் தண்டனைகளையும் அடுத்தடுத்து அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டை மும்பை உயர் நீதிமன்றம் விசாரித்து, விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தது.இதையடுத்து, அந்த நபர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் கே.வி.விஸ்வநாதன், அருண் பள்ளி ஆகியோர் அடங்கிய அமர்வு விரிவாக விசாரித்தது.
இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: மனிதர்களுக்கு இருப்பது ஒரே வாழ்க்கைதான். இந்நிலையில், ஒரு குற்றவாளி இரண்டு முறை ஆயுள் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்று தண்டனை விதிப்பது முரண்பாடானதும், பகுத்தறிவற்றதுமாகும்.இருவேறு குற்றங்களுக்காக விதிக்கப்படும் ஆயுள் தண்டனைகளை அடுத்தடுத்து அனுபவிக்க முடியாது. அதே நேரத்தில், அந்த இருவேறு வழக்குகளையும் தனித்தனியாகவும், அவற்றின் தாக்கத்தை கருத்தில் கொண்டும் பார்க்க வேண்டும். ஒரு குற்றத்துக்காக வழங்கப்படும் தண்டனையில் குறைப்பு செய்யப்பட்டாலும், அது மற்றொரு குற்றத்துக்காக விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையின் தாக்கத்தை நிச்சயமாகக் குறைத்துவிடாது. எனவே, இரு குற்றங்களுக்காகவும் விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனைகளை அடுத்தடுத்து அனுபவிக்க வேண்டும் என்ற உத்தரவு சட்டரீதியாக ஏற்கத்தக்கதல்ல என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து, இந்த வழக்கில் மும்பை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்வதாகவும் உச்ச நீதிமன்ற அமர்வு அறிவித்தது.














