Home செய்திகள் தேசிய செய்திகள் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3% உயர்வு

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3% உயர்வு

புதுடெல்லி, அக். 29-
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலை நிவாரணத்தை 3 சதவீதம் உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
பணவீக்கம் மற்றும் விலைவாசி உயர்வைச் சமாளிக்கும் வகையில், மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி ஆண்டுக்கு இருமுறை உயர்த்தி வழங்கப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளை அடிப்படையாகக் கொண்டு இந்த உயர்வு வழங்கப்படுகிறது. அந்த வகையில், கடந்த ஏப்ரல் மாதத்தில் மத்திய அரசு அகவிலைப்படியை 2 சதவீதம் உயர்த்தியது. இதைத் தொடர்ந்து, ஜூலை மாதத்துக்கான அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்படாமல் இருந்தது. தற்போது, ஜூலை 1-ம் தேதி முதல் முன்தேதியிட்டு 3 சதவீத உயர்வு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி தற்போதைய 60 சதவீதத்தில் இருந்து 63 சதவீதமாக அதிகரிக்கிறது.