
சென்னை, நவ. 1- தமிழகத்தில் அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.1.50 லட்சம் கோடியில் நகர்ப்புற உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில், முதல்வரின் ஒருங்கிணைந்த நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து நகராட்சித் துறை செயலர் ககன் தீப் சிங் பேடி வெளியிட்ட அரசாணையில் கூறியுள்ளதாவது: தமிழகத்தில் அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.1.50 லட்சம்கோடியில் நகர்ப்புற உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில், முதல்வரின் ஒருங்கிணைந்த நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி குடிநீர் விநியோகத்துக்கு ரூ.50 ஆயிரம் கோடி, பாதாளச் சாக்கடைக்கு ரூ.60 ஆயிரம் கோடி, போக்குவரத்துக்கு ரூ.30,350 கோடி ஒதுக்க மதிப்பிடப்பட்டுள்ளது.
திடக்கழிவு மேலாண்மைக்கு ரூ.3 ஆயிரம் கோடி, பசுமை, பொழுதுபோக்கு வசதிகள் மற்றும் நீர்நிலைகள் மேம்பாட்டுக்கு தலா ரூ.2 ஆயிரம் கோடி, சமூக உட்கட்டமைப்புக்கு ரூ.1,500 கோடி, பாதுகாப்புக்கு ரூ.500 கோடி, டிஜிட்டல் நிர்வாகத்துக்கு ரூ.300 கோடி, சுகாதாரத்துக்கு ரூ.300 கோடி, திட்ட ஆவணங்கள் தயாரிப்புக்கு ரூ.50 கோடி என மொத்தம் ரூ.1.50 லட்சம் கோடி திட்ட மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.













