
இம்பால், நவ. 1-
மணிப்பூரில் முதல்-மந்திரி பதவி விலகக் கோரி மெய்தி மற்றும் நாகா சமூகங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பேரணியாகச் சென்று எதிர்ப்பை பதிவு செய்தனர்.மணிப்பூரில் கடந்த 2023-ம் ஆண்டு மே 3-ந்தேதி குகி, மெய்தி இனங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியது. சில மாதங்களில் 60-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதுடன், ஆயிரக்கணக்கானோரின் வீடுகள் சூறையாடப்பட்டன. இதையடுத்து மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. ராணுவம் வரவழைக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டபோதும், 49 பேரைக் காணவில்லை. பின்னர் ஜனாதிபதி ஆட்சி விலக்கிக் கொள்ளப்பட்டது. பா.ஜ.க.வைச் சேர்ந்த ஒய்.கே. சிங், கடந்த பிப்ரவரி மாதம் முதல்-மந்திரியாக பதவியேற்றார். எனினும், 3 ஆண்டுகளாகத் தொடர்ந்த வன்முறையில் இதுவரை 306 பேர் உயிரிழந்துள்ளதாக மணிப்பூர் அரசு சமீபத்தில் சட்டசபையில் தெரிவித்தது. அவ்வப்போது மோதல்கள் தொடரும் நிலையில், பயங்கரவாதிகள் மற்றும் ஆயுதக் குழுக்களுக்கு எதிரான நடவடிக்கையை பாதுகாப்புப் படையினர் தீவிரப்படுத்தி வருகின்றனர். சமீபத்தில் மெய்தி இனத்தைச் சேர்ந்த 3 பேர் குக்கி பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மெய்தி அமைப்புகள் சார்பில் தலைநகர் இம்பாலில் பேரணி நடைபெற்றது. திட்டிம் மைதானத்தில் இருந்து தாவ் மைதானம் நோக்கி ஆயிரக்கணக்கானோர் சென்றனர். பூர்வகுடி மக்களைப் பாதுகாக்கத் தவறிய முதல்-மந்திரி கெம்சந்த் சிங் பதவி விலக வேண்டும் என்றும், பயங்கரவாதக் குழுக்களுடன் செய்யப்பட்ட தாக்குதல் நிறுத்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் ஒருங்கிணைப்பாளர் வலியுறுத்தினார். இதனிடையே, உள்ளூர் மக்களைப் பாதுகாக்கக் கோரி சாண்டெல், சேனாபதி மாவட்டங்களிலும் நாகா அமைப்புகள் உள்பட பல்வேறு அமைப்புகள் பேரணி நடத்தின. குகி-ஜோ பயங்கரவாத அமைப்புகள் வன்முறையில் ஈடுபடுவதாகக் கூறி அவர்கள் கோஷமிட்டனர். மணிப்பூரில் மீண்டும் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று குகி-ஜோ பெண்கள் கூட்டமைப்பும் வலியுறுத்தியுள்ளது. கடந்த 21-ந்தேதி நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், குகி-ஜோ கவுன்சில் செய்தித் தொடர்பாளர் ஜின்ஜா உவல்ஜாங், புதிய அரசு அமைந்த பிறகு தங்கள் சமூகத்தைச் சேர்ந்த 32 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவித்தார். ஜனாதிபதி ஆட்சியில் பாதுகாப்பாக உணர்ந்ததாகக் கூறிய அவர், உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கும் எரிந்த வீடுகளுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், இந்தியாவில் இருந்து பிரிவினை கோரவில்லை என்றும் தெரிவித்தார்.













