Home மாவட்டங்கள் சென்னை சென்னையில் 80-க்கும் மேற்பட்ட இடங்களில் வாகனத் தணிக்கை

சென்னையில் 80-க்கும் மேற்பட்ட இடங்களில் வாகனத் தணிக்கை

சென்னை, நவ. 1-
சென்னையில் சாலைப் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில், போக்குவரத்து விதிமீறல்களுக்கு எதிராக நேற்று ‘விதிமீறல்களற்ற நாள்’ (நோ டாலரன்ஸ் டே) கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி, மாநகரின் 80-க்கும் மேற்பட்ட இடங்களில் போக்குவரத்து போலீஸார் சிறப்பு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். சென்னையில் சாலை விபத்துகளைக் குறைத்து, வாகன ஓட்டிகளிடையே போக்குவரத்து விதிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்தச் சிறப்புத் தணிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதற்காக, மாநகரின் அனைத்து முக்கியச் சாலைகள் மற்றும் பிரதான சாலைகளில் நேற்று காலை முதல் போக்குவரத்து போலீஸார் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
போக்குவரத்துக் காவல் ஆய்வாளர்கள் தலைமையில் நடைபெற்ற இந்தச் சோதனையின்போது, தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு, அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டியவர்கள் மற்றும் உரிய வாகன ஆவணங்கள் இல்லாதவர்களும் சோதனையில் சிக்கினர். உரிய ஆவணங்கள் இல்லாத சில வாகனங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். நான்கு சக்கர வாகனங்களில் பயணித்தவர்களிடம் சீட் பெல்ட் அணிவதன் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டியவர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. இந்தச் சிறப்புத் தணிக்கையின்போது, தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனங்களில் சென்ற சில காவலர்களும் போக்குவரத்து போலீஸாரின் சோதனையில் சிக்கினர். அவர்களுக்கும் விதிமுறைப்படி அபராதம் விதிக்கப்பட்டது. போக்குவரத்து விதிகளைப் பின்பற்றுவதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில், மாநகரின் பல்வேறு பகுதிகளில் இந்தச் சோதனை நடத்தப்பட்டது.