
திருப்பத்தூர்: நவ. 5-
அரசு வேலை வாங்கித் தருவதாகவும், பணி இடமாற்றம் செய்து தருவதாகவும் கூறி, ரூ.6.30 கோடி வரை பணம் பெற்று மோசடி செய்ததாக, அதிமுக முன்னாள் அமைச்சர் நிலோபர் கபீலின் உதவியாளராகப் பணியாற்றிய பிரகாசம் மீது திருப்பத்தூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கடந்த 2017 முதல் 2021-ம் ஆண்டு வரை அதிமுக ஆட்சியில் இருந்தபோது, திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி தொகுதி எம்எல்ஏவாக இருந்த நிலோபர் கபீல், தொழிலாளர் நலத்துறை அமைச்சராகப் பதவி வகித்தார். அந்தக் காலகட்டத்தில், வாணியம்பாடி பகுதியைச் சேர்ந்த பிரகாசம், அமைச்சரின் உதவியாளராகப் பணியாற்றி வந்தார்.
அமைச்சரின் உதவியாளராக இருந்த செல்வாக்கைப் பயன்படுத்தி, அரசு வேலை பெற முயன்று வந்தவர்கள் மற்றும் பணி இடமாற்றம் கோரிய திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்களை பிரகாசம் அணுகியதாகக் கூறப்படுகிறது. அவர்களது குடும்பத்தினரிடமும் அரசு வேலை மற்றும் பணி இடமாற்றம் செய்து தருவதாக அவர் தெரிவித்ததாகவும் புகார் எழுந்துள்ளது.
இதனை நம்பிய 68 பேரிடம், பல்வேறு தவணைகளாக மொத்தம் ரூ.6 கோடியே 30 லட்சம் வரை பிரகாசம் பணம் பெற்றதாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே அதிமுக ஆட்சி முடிவுக்கு வந்ததுடன், நிலோபர் கபீலும் அமைச்சர் பதவியை இழந்தார்.
அதன்பிறகு, பணம் கொடுத்தவர்கள் தங்களது தொகையைத் திருப்பித் தருமாறு பிரகாசத்திடம் கேட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், அவர்களது கோரிக்கைக்கு பிரகாசம் உரிய பதில் அளிக்கவில்லை என புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் திருப்பத்தூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாரிடம் புகார் அளித்தனர். அந்தப் புகாரின் அடிப்படையில், பிரகாசம் மீது போலீஸார் நேற்று முன்தினம் வழக்குப் பதிவு செய்தனர்.













