
வாஷிங்டன்: நவ. 5-
அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட அப்துல் எல்-சையத் வெற்றி பெற்று, அந்நாட்டின் முதல் முஸ்லிம் செனட்டராகத் தேர்வாகியுள்ளார். அவரது வெற்றி வரலாற்றுச் சாதனையாகக் கருதப்படுகிறது. இதன் மூலம் இந்தியாவின் கர்நாடகத்தைச் சேர்ந்த ஒரு சிறிய கிராமமும் உலகளவில் கவனம் பெற்றுள்ளது.
அப்துல் எல்-சையத்தின் மனைவி சாரா ஜுகாகுவின் குடும்பப் பின்னணியே இதற்கு முக்கியக் காரணமாகும். மங்களூருவிலிருந்து சுமார் 140 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கர்நாடகத்தின் பட்கல் பகுதியைச் சேர்ந்தவர் சாரா. அமெரிக்காவில் மனநல மருத்துவராகப் பணியாற்றி வரும் அவர், மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் படித்தபோது அப்துல் எல்-சையத்தை சந்தித்தார். இருவருக்கும் 2006-ல் திருமணம் நடைபெற்றது. அமெரிக்க இடைக்காலத் தேர்தல் பிரச்சாரத்திலும் சாரா தீவிரமாகப் பங்கேற்றார்.
சாராவின் தந்தை ஜுகாகு தாயேப், பட்கலில் வளர்ந்தவர். எம்.பி.பி.எஸ். படிப்பை முடித்த பிறகு அமெரிக்காவுக்குச் சென்று, சிறுநீரக மருத்துவ நிபுணராகப் பணியாற்றினார். சாராவின் தாத்தா ஜுகாகு சம்சுதீன், புகழ்பெற்ற வழக்கறிஞராகவும் கல்வியாளராகவும் விளங்கினார்.
முன்னாள் துணைக் குடியரசுத் தலைவர் பி.டி. ஜாட்டி, ஜாம்கண்டி சமஸ்தானத்தின் (தற்போதைய பாகல்கோட் மாவட்டம்) முதல்வராக இருந்தபோது, அவரது அமைச்சரவையில் நிதித்துறை துணை அமைச்சராக ஜுகாகு சம்சுதீன் பணியாற்றினார்.
அப்துல் எல்-சையத்தின் வெற்றியை பாகல்கோட் பகுதி மக்கள் இனிப்பு வழங்கிக் கொண்டாடி வருகின்றனர். அமெரிக்காவின் மிக முக்கியப் பதவிக்கு தங்களது ஜுகாகு குடும்பத்தைச் சேர்ந்தவரின் கணவர் தேர்வாகியிருப்பது பெருமை அளிப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து எல்-சையத் கூறுகையில், “சுமார் 20 ஆண்டுகளாக ஒரு தென்னிந்தியக் குடும்பத்தில் வாழ்ந்து வருகிறேன். அதனால் தென்னிந்தியப் பண்பாடு எனக்குள் ஆழமாகப் பதிந்துவிட்டது. நான் ஓர் அரேபியரை விட அதிக இந்தியனாக மாறியிருக்கிறேன்” என்றார்.














