
கோவை: நவ.6-
கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழா வருகிற 10-ந்தேதி தொடங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் வருகிற 15-ந்தேதி பிற்பகல் 3 மணியளவில் நடைபெறுகிறது. சூரசம்ஹாரம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுவதால், கோவிலுக்கு அதிகளவில் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கந்தசஷ்டி விழாவையொட்டி பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வரும் பக்தர்கள் படிக்கட்டுப் பாதை மற்றும் கோவில் பஸ்களை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டது.
பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதுடன், போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில் வருகிற 15 மற்றும் 16-ந்தேதிகளில் மருதமலை மலைப்பாதையில் இருசக்கர வாகனங்கள் மற்றும் 4 சக்கர வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த 2 நாட்களிலும் மலைப்பாதையில் வாகனப் போக்குவரத்துக்கு அனுமதி இல்லை.
என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பக்தர்கள் எவ்வித சிரமமும் இன்றி சுவாமி தரிசனம் செய்வதற்காக கூடுதல் காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். கோவிலுக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பு, கூட்ட நெரிசல் மற்றும் போக்குவரத்து ஒழுங்கு உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு இந்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.மேலும், விழாவுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக குடிநீர், மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கவும் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. விழா நாட்களில் பக்தர்களுக்குத் தேவையான வசதிகள் கிடைப்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
















