Home செய்திகள் தேசிய செய்திகள் ரூஹுல்லா விலக பாஜக காரணம்: தேசிய மாநாட்டு கட்சி

ரூஹுல்லா விலக பாஜக காரணம்: தேசிய மாநாட்டு கட்சி

ஸ்ரீநகர்: நவ.6-

ஸ்ரீநகர் மக்களவைத் தொகுதி தேசிய மாநாட்டுக் கட்சி உறுப்பினரான ஆகா ரூஹுல்லா மெஹ்தி, கட்சியிலிருந்து விலகியதற்கும், எம்.பி. பதவியை ராஜினாமா செய்ததற்கும் பாஜகவே காரணம் என்று தேசிய மாநாட்டுக் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் தொகுதி எம்.பி.யாக இருந்த ஆகா ரூஹுல்லா மெஹ்தி, கடந்த சில தினங்களுக்கு முன்பு தேசிய மாநாட்டுக் கட்சியிலிருந்து விலகினார். தொடர்ந்து, தனது எம்.பி. பதவியையும் ராஜினாமா செய்தார்.இந்நிலையில், ஸ்ரீநகரில் உள்ள தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைமையகத்தில் அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் சலாம் சாகர், சஜத் ஷாஹீன் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:‘ஆபரேஷன் லோட்டஸ்’ திட்டத்தின் மூலம் பாஜக தனது நோக்கத்தை நிறைவேற்றியுள்ளது. மெஹ்தியின் விலகல் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட உத்தியாகும். அவரை தேசிய மாநாட்டுக் கட்சியிலிருந்து வெளியேற்றுவதில் பாஜக வெற்றி பெற்றுள்ளது.கடந்த 80 முதல் 90 ஆண்டுகளில் இரு அல்லது மூன்று முறை தேசிய மாநாட்டுக் கட்சியை பலவீனப்படுத்த முயன்ற சக்தியுடன் மெஹ்தி தற்போது இணைந்துள்ளார். அந்த முயற்சிகளை முன்பு நாங்கள் முறியடித்தோம். ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை மீட்கும் போராட்டத்தை தேசிய மாநாட்டுக் கட்சி கைவிட்டுவிட்டதாக மெஹ்தி கூறியிருப்பது ஒரு சாக்குப்போக்கு.ஜம்மு-காஷ்மீர் மக்களின் உரிமைகள் தொடர்பாக தேசிய மாநாட்டுக் கட்சி ஒருபோதும் சமரசம் செய்யாது என்று சலாம் சாகர், சஜத் ஷாஹீன் ஆகியோர் தெரிவித்தனர்.