Home மாவட்டங்கள் சென்னை மணல் குவாரி முறைகேடு:30 இடங்களில் சோதனை

மணல் குவாரி முறைகேடு:30 இடங்களில் சோதனை

சென்னை: நவ.6-
தமிழ்நாட்டில் நடைபெற்றதாகக் கூறப்படும் ரூ.4,730 கோடி மதிப்பிலான ஆற்று மணல் குவாரி முறைகேடு தொடர்பாக, மாநிலம் முழுவதும் 30 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். அனுமதிக்கப்பட்ட அளவைவிட 30 மடங்கு வரை கூடுதலாக ஆற்று மணல் அள்ளப்பட்டதன் மூலம் ஊழல் நடைபெற்றுள்ளதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது.
திண்டுக்கல் ஜி.டி.என். சாலையில் உள்ள பிரபல தொழில் அதிபர் ரத்தினத்தின் வீடு, அலுவலகங்கள் மற்றும் அவருக்குச் சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக 5 வாகனங்களில் வந்த 20-க்கும் மேற்பட்ட அதிகாரிகள், காலை 6 மணி முதல் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.இதேபோல், புதுக்கோட்டை உள்ளிட்ட 30 இடங்களில் மணல் குவாரி உரிமையாளர்களின் வீடுகள், அலுவலகங்கள் மற்றும் அவர்களுக்குச் சொந்தமான இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது. குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக மணல் அள்ளப்பட்டதாகக் கூறப்படும் முறைகேடு தொடர்பாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதையடுத்து, அமலாக்கத்துறை கடந்த ஜூலை 18-ம் தேதி டி.ஜி.பி.க்கு மீண்டும் நினைவூட்டல் கடிதம் அனுப்பியது. பின்னர், அமலாக்கத்துறை அளித்த புகார் மற்றும் ஆவணங்களின் அடிப்படையில் ஊழல் தடுப்புப் பிரிவு விசாரணை நடத்தியது. அதன் தொடர்ச்சியாக, மணல் குவாரி முறைகேடு தொடர்பாக சென்னை சிறப்பு புலனாய்வுப் பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அந்த வழக்கின் அடிப்படையிலேயே தற்போது சோதனை நடைபெற்று வருகிறது.இதற்கு முன்பு, பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது நடைபெற்றதாகக் கூறப்படும் பணப்பரிவர்த்தனை முறைகேடு தொடர்பாக தொழில் அதிபர் ரத்தினத்தின் வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை இரண்டு முறை சோதனை நடத்தி வழக்குப்பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.