Home செய்திகள் தேசிய செய்திகள் தீபாவளி சரவெடி: முதலீட்டாளர்களுக்கு ரூ.8 லட்சம் கோடி லாபம்

தீபாவளி சரவெடி: முதலீட்டாளர்களுக்கு ரூ.8 லட்சம் கோடி லாபம்

மும்பை: நவ.6-
இந்தியப் பங்குச் சந்தைகளில் நேற்று வர்த்தகம் மாபெரும் ஏற்றத்துடன் தொடங்கியது. சென்செக்ஸ் ஒரே நாளில் 2,008 புள்ளிகள் உயர்ந்ததையடுத்து, முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பு சுமார் ரூ.8 லட்சம் கோடி அதிகரித்தது. இது முதலீட்டாளர்களுக்கு முன்கூட்டியே கிடைத்த தீபாவளிப் பரிசாக அமைந்தது.
நேற்றைய வர்த்தகத்தில் தொடக்கம் முதலே சந்தைகள் விறுவிறுப்புடன் செயல்பட்டன. மும்பை பங்குச் சந்தை (பிஎஸ்இ) சென்செக்ஸ் 2,008 புள்ளிகள், அதாவது 2.60 சதவீதம் உயர்ந்து 79,310 புள்ளிகளில் நிலைபெற்றது. தேசிய பங்குச் சந்தை (என்எஸ்இ) நிஃப்டி 570 புள்ளிகள், அதாவது 2.40 சதவீதம் உயர்ந்து 24,536 புள்ளிகளில் முடிவடைந்தது. இதன் மூலம் இந்தியப் பங்குச் சந்தைகள் தொடர்ந்து 6-வது வர்த்தக தினமாக ஏற்றத்துடன் நிறைவடைந்தன.கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட கடும் வீழ்ச்சி, அந்நிய முதலீட்டாளர்களின் வருகை மீண்டும் அதிகரித்தது மற்றும் அமெரிக்க இடைக்காலத் தேர்தல் முடிவுகளால் உலகளவில் உருவான சாதகமான சூழல் ஆகியவை சந்தைகளின் உயர்வுக்கு முக்கிய காரணங்களாக அமைந்தன. நேற்று நடைபெற்ற வர்த்தகத்தில் 16 முக்கியத் துறைசார் குறியீடுகளில் 14 துறைகள் ஏற்றத்துடன் முடிவடைந்தன.
அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் ஜனநாயகக் கட்சி பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் சபை இரண்டையும் கைப்பற்றியதால், அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு அரசியல் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதனால் ஈரானுடனான போர் பதற்றத்தைத் தணித்து, அமைதியை நோக்கி ட்ரம்ப் நிர்வாகம் நகரும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இது உலகளாவிய சந்தைகளில் முதலீட்டு நம்பிக்கையை மீண்டும் ஏற்படுத்தியுள்ளது. இந்தியப் பங்குகளை தொடர்ந்து விற்று வந்த அந்நிய நிதி நிறுவன முதலீட்டாளர்கள் மீண்டும் இந்தியச் சந்தையை நோக்கி திரும்பியுள்ளனர். புதன்கிழமை வரை தொடர்ந்து 4-வது நாளாக அவர்கள் ரூ.7,284 கோடி மதிப்பிலான பங்குகளை வாங்கினர். நவம்பர் மாதத்தின் முதல் மூன்று வர்த்தக தினங்களில் மட்டும் அந்நிய முதலீட்டாளர்கள் சுமார் ரூ.17,235 கோடியை இந்தியச் சந்தையில் முதலீடு செய்துள்ளனர். நேற்றைய வர்த்தகத்தையடுத்து, பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் மொத்த சந்தை மூலதன மதிப்பு வரலாற்றில் முதல்முறையாக ரூ.500 லட்சம் கோடியைக் கடந்து, ரூ.503 லட்சம் கோடியாக உயர்ந்தது.