Home செய்திகள் தேசிய செய்திகள் 7 முக்கிய ரெயில் வழித்தடங்கள் 4 வழிப்பாதையாகும்

7 முக்கிய ரெயில் வழித்தடங்கள் 4 வழிப்பாதையாகும்

புதுடெல்லி, நவ. 8-
நிலக்கரி உள்ளிட்ட சரக்குப் போக்குவரத்தும், பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதால், இந்திய ரெயில் பாதைகளில் கடும் நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதற்கு நிரந்தரத் தீர்வு காணவும், ரெயில்களின் தாமதத்தைத் தவிர்க்கவும், நாடு முழுவதும் உள்ள 7 முக்கிய ரெயில் வழித்தடங்களை 4 வழிப்பாதைகளாக மாற்ற இந்திய ரெயில்வே முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து ரெயில்வே துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தற்போது ரெயில் பாதைகளில் கடும் நெரிசல் நிலவுகிறது. நிலக்கரி மற்றும் பிற சரக்குகளின் போக்குவரத்து உச்சத்தில் உள்ளது. இதற்கு நிரந்தரத் தீர்வாக, கடந்த 10 ஆண்டுகளில் 36 ஆயிரம் கிலோமீட்டர் கூடுதல் தண்டவாளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. புதிய ரெயில் பாதைகளை உருவாக்குவதும், ரெயில்வேயின் கொள்ளளவை அதிகரிப்பதும் மிகவும் அவசியம். தொடர்ந்து புதிய பாதைகளை அமைப்பது கட்டாயமாகும். டெல்லி, கொல்கத்தா, சென்னை, மும்பை ஆகிய நகரங்களை இணைக்கும் தங்க நாற்கர ரெயில் வழித்தடங்களுக்கும், டெல்லி–சென்னை, மும்பை–கொல்கத்தா, டெல்லி–கவுகாத்தி ஆகிய முக்கிய குறுக்கு வழித்தடங்களுக்கும் 4 வழிப்பாதைகளாக மாற்ற முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான புதிய திட்டங்களுக்கு பிரதமர் அவ்வப்போது ஒப்புதல் அளித்து வருகிறார். இந்த 4 வழிப்பாதை பணிகள் நிறைவடைந்த பிறகு, கூடுதலாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரெயில்களை இயக்க முடியும். இதன் மூலம் பயணிகளின் காத்திருப்புப் பட்டியல் மற்றும் முன்பதிவு தொடர்பான சிக்கல்கள் கணிசமாகக் குறையும். ரெயில்வேயின் கட்டமைப்பை விரிவுபடுத்துவதே மத்திய அரசின் தொடர்ச்சியான முயற்சியாகும் என்று அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.