Home செய்திகள் தேசிய செய்திகள் வாக்கு எண்ணிக்கை முறைகேடு புகார்: நடிகை ரோஜா கைது

வாக்கு எண்ணிக்கை முறைகேடு புகார்: நடிகை ரோஜா கைது

நகரி, நவ. 8-
நகரி தொகுதியில் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடைபெற்றதாகக் கூறி, தர்ணாவில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சரும் நடிகையுமான ரோஜாவை போலீசார் கைது செய்தனர். நகரி தொகுதிக்கு உட்பட்ட விஜயபுரம் மண்டலம் இல்லத்தூர் பகுதியில், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட எம்.பி. டி.சி. வேட்பாளர் உதயகிரி தேவி, 10 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக முதலில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, வாக்கு எண்ணிக்கையை மீண்டும் நடத்த வேண்டும் என்று தெலுங்கு தேசம் கட்சி கோரிக்கை விடுத்தது. இதன் பின்னர், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி வேட்பாளரை அங்கிருந்து வெளியேற்றிவிட்டு, சிறிது நேரத்துக்குப் பிறகு தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளர் ஜெயபிரதா 3 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஒரே தொகுதியில் வெற்றி அறிவிப்பில் மாற்றம் ஏற்பட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகை ரோஜா, வேட்பாளர் மற்றும் கட்சி தொண்டர்களுடன் இணைந்து டிகிரி கல்லூரி முன்பு தர்ணாவில் ஈடுபட்டார். வாக்கு எண்ணிக்கை தொடர்பாக மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி அவர் போராட்டத்தில் கலந்து கொண்டார்.அப்போது ரோஜா கூறுகையில், “வாக்கு எண்ணும் மையத்துக்குள் ஏஜெண்டுகளை அனுமதிக்கவில்லை. இதனால் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடைபெற்றுள்ளது. எனவே, மறு வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும்” என்றார். தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ரோஜாவை போலீசார் குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்று கைது செய்தனர். வாக்கு எண்ணிக்கை தொடர்பாக முதலில் உதயகிரி தேவி வெற்றி பெற்றதாகவும், பின்னர் ஜெயபிரதா வெற்றி பெற்றதாகவும் அறிவிக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து இந்தப் போராட்டமும் கைதும் நடைபெற்றது.