
காசியாபாத், நவ. 8-
உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள வசுந்தரா காவல் சாவடியில் வெள்ளிக்கிழமை இரவு சுமார் 9 மணியளவில் திடீரென வெடி சத்தம் கேட்டது. இதையடுத்து, காவல் சாவடியில் வெடி விபத்து ஏற்பட்டது. சம்பவத்தின்போது அங்கு போலீஸார் இருந்ததாகவும், அவர்களில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் காவல் துறையினர் தெரிவித்தனர். வெடி விபத்தின் தாக்கத்தில் காவல் சாவடியின் 2 ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தன. மேலும், காவல் சாவடியின் ஒரு சுவரில் விரிசல் ஏற்பட்டது. அப்போது அங்கு ஒரு பொருளை வழங்க வந்திருந்த டெலிவரி ஊழியர் மீது உடைந்த கண்ணாடித் துண்டு தாக்கியதில், அவரது தலைப் பகுதியில் காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். தற்போது அவர் நலமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து காசியாபாத் துணை ஆணையர் ரிஜுல் குமார் கூறுகையில், “வெடி விபத்து காரணமாக காவல் சாவடியின் 2 ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து, சுவரில் விரிசல் ஏற்பட்டது. அப்போது அங்கு போலீஸார் இருந்தனர். ஆனால், அவர்களுக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை. ஒரு பொருளை வழங்க வந்த டெலிவரி ஊழியர் மீது கண்ணாடித் துண்டு தாக்கியதில் தலைப் பகுதியில் காயம் ஏற்பட்டது. அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். தற்போது அவர் நலமாக உள்ளார்” என்றார். இந்த சம்பவம் நடந்த சிறிது நேரத்திலேயே, தடை செய்யப்பட்ட அமைப்பான ‘தெஹ்ரீக்-உல் முஜாகிதீன் ஹிந்துஸ்தான்’ அமைப்பு, இந்தத் தாக்குதலுக்கு தாங்கள் பொறுப்பேற்பதாகத் தெரிவித்தது. இதுகுறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்தில் வெடிமருந்துகள், வெடிபொருட்கள் அல்லது அதுபோன்ற வேறு எந்தப் பொருட்களின் தடயங்களும் இதுவரை கண்டெடுக்கப்படவில்லை என்று காவல் துறையினர் தெரிவித்தனர்.













