
திருச்செந்தூர், நவ. 8-
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. விழா தொடக்க நாளில் அதிகாலை 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெறும். காலை 5 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் யாகசாலைக்கு எழுந்தருளுகிறார். 7 மணிக்கு யாகசாலை பூஜையுடன் விழா தொடங்குகிறது. தொடர்ந்து மூலவருக்கு உச்சிகால அபிஷேகம், தீபாராதனை நடைபெறும். பின்னர் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் தங்கச்சப்பரத்தில் சண்முகவிலாச மண்டபத்துக்கு எழுந்தருளுகிறார். அங்கு மகா தீபாராதனை நடைபெறும். மாலை சாயரட்சை தீபாராதனைக்குப் பிறகு, திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் பல்வேறு திரவியங்களால் அபிஷேகம், அலங்காரம் நடைபெறும். தொடர்ந்து சுவாமி, அம்பாள்களுடன் தங்க ரதத்தில் கிரிவீதியில் பவனி வருகிறார். 2-ம் நாள் முதல் 5-ம் நாள் வரை பல்வேறு பூஜைகள், அபிஷேகங்கள் நடைபெறும். மாலை 3.30 மணிக்கு மூலவருக்கு சாயரட்சை தீபாராதனை நடத்தப்பட்டு, பின்னர் சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி-தெய்வானையுடன் தங்க ரதத்தில் கிரிவீதியில் பவனி வருகிறார். 6-ம் திருநாளான 15-ந் தேதி சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. மாலை 4 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் சூரசம்ஹாரத்துக்கு எழுந்தருளுகிறார். தொடர்ந்து கடற்கரையில் சூரபத்மன் வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறும். பின்னர் சந்தோஷ மண்டபத்தில் மகா தீபாராதனை நடக்கிறது. 7-ம் திருநாளான 16-ந் தேதி தெய்வானை அம்மாள் தபசு காட்சிக்கு புறப்பாடு, மாலை மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெறும். இரவு சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும் தெய்வானை அம்பாளுக்கும் வைதீக முறைப்படி திருக்கல்யாணம் நடக்கிறது.
















